ரமலான் தந்த மாற்றங்கள்
http://sukrymuhajiree.blogspot.com/2016/06/blog-post_74.html
ரமலான் தந்த மாற்றங்கள்
قال الله تعالي وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى (41)
இறையருளால் ஒரு மாதம் நோன்பிருந்து இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அத்துடன் நின்றுவிடாமல் ரமலான் நம்மிடம் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
1. ரமலான் நம் எல்லோரையும் தொழுகையாளிகளாக ஆக்கியது.
மற்ற காலங்களில் பள்ளிவாசல்களில் இல்லாத கூட்டம் ரமலானில் காணப்பட்டது.
ஐந்து நேர தொழுகைளை மிகவும் பேணிக்கையாக நாம் எல்லோரும் தொழுது வருகிறோம்.
இந்த ஒருமாத காலம் நம்மில் யாரும் விடுமுறை எடுக்கவில்லை. என்றாலும் நமது பணிகளுக்கிடையே பேணிக்கையாக – கவனமாக தொழுதோம்.
பணிகளுக்கிடையே ஜமாஅத்தாக, தக்பீர் தஹ்ரிமாவுடன் தொழ முடியும் என்பதை இந்த ரமலான் உணர்த்தியது.
2. ரமலான் நமது உள்ளத்தில் ஈரத்தை ஏற்படுத்தியது.
ரமலானில் நாம் ஏழைகளுக்கு உதவி செய்தோம். நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்தோம். ஜகாத் கொடுத்தோம். பள்ளிவாசல், மத்ரஸாக்களுக்கு வாரி வழங்கினோம். பல்வேறு காரணங்களை கூறி வந்தவர்களுக்கு உதவி செய்தோம்.
ரமலான் நம்மிடமிருந்து கஞ்சத்தனத்தை அகற்றியது. மற்ற மாதங்களில் பணம் செலவழிக்க யோசிக்கும் நாம் இம்மாதத்தில் நமது குடும்பத்துக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி வாரி வழங்கினோம்.
இந்த ஈரம் இனி அடுத்த 11 மாதங்களிலும் இருக்க வேண்டும்.
3. ரமலான் இச்சைகளுக்கு தடை விதித்தது.
உணவு தான் இச்சைகளுக்கு அடிப்படை காரணம். ரமலான் உணவை கட்டுப்படுத்தியது.
பகலில் பசித்திருந்த நாம் இரவில் அனுமதிக்கப்பட்ட வேளைகளில் உண்ண முடியாமல் தவித்தோம்.
ஹலால் ஆன நாம் சம்பாதித்த பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட உணவையும் அருகிலிருந்தும் உண்ணாமலிருந்த நாம் ஒன்றை உணர வேண்டும்.
ஒரு பொருள் நமக்கு கிடைத்தாலும் அல்லாஹ் அதனை ஹலால் ஆக்கினால் தான் அது நமக்கு ஹலால்.
அருகில் மனைவியும், அனுபவிக்க ஆசையும் – ஆண்மையும் மட்டும் இருந்தால் போதாது . அல்லாஹ்வின் அனுமதியும் வேண்டும்.
ரமலான் நமது ஆசைகளை , இச்சைகளை கட்டுப்படுத்தியது
قال رسول الله صلي الله عليه وسلم : حب الدنيا رأس كل خطيئة
4. ரமலான் நம்மை ஒற்றுமைப்படுத்தியது.
ஒரே நேரத்தில் நோன்பை திறப்பது, ஒரே நேரத்தில் நோன்பு வைப்பது. (குழப்பவாதிகள் வழக்கம் போல் இதிலும் தங்களின் கைவரிசையை பயன்படுத்தி முஸ்லிம்களில் சொற்பமானோரை திசை திருப்பிய போதும் பெருவாரியான முஸ்லிம்கள் இந்தக் கட்டுப்பாட்டில் நிலைத்து நின்றனர்.
5. ரமலான் நம்மை நல்லவர்களாக்கியது.
பொய், புறம், திட்டுதல் , சபித்தல். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
பீடி, சிகரெட் போன்றவற்றை தவிர்ந்து இருக்க முடியும் என்பதை உணர்த்தியது.
6. இறையச்சத்தை தந்தது.
தனித்திருந்தாலும் பகலில் சாப்பிடாமல் இருந்தோம். சாப்பிட பயந்தோம். மனது வரவில்லை.
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (سورة البقرة)
மேற்கூறப்பட்ட ரமலான் ஏற்படுத்திய மாற்றங்கள் அனைத்தும் இனி வரும் 11 மாதங்களிலும் நீடிக்க வேண்டும்.
அவ்வாறு நீடித்ததெனில் நிச்சயம் ரமலானின் நோக்கம் நிறைவேறிவிடும். மறுமையில் நமக்காக அது பரிந்துரை செய்யும்.