அல்லாஹ் நேசிக்கும் நல்லோர்


Image result for அல்லாஹ் நேசிக்கும் நல்லோர்

ஒளிமயமான இஸ்லாமிய நெறியியை பின்பற்றிவரும் இறை அச்சமுள்ள முஸ்லிம், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சகிப்புத் 
தன்மையையும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதையும் வழமையாகக் கொள்ளவேண்டும்.

… அவர்கள் கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கிறான். (3:134)

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வலிமையானவர் யாரெனில், தனது உடல் பலத்தால் மனிதர்களைத் தாக்கி வெற்றி கொள்பவரல்ல. மாறாக, கோபத்தை அடக்கும் ஆற்றல் பெற்று நிதானத்தைக் கடைபிடிப்பவரே வலிமையானவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வலிமை என்பது தாக்குவதைக் கொண்டல்ல. வலிமையானவர் யாரெனில் கோபம் ஏற்படும் சமயத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்துபவரே.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஆண்மையின் அடையாளமாகும். கோபத்தை மிகத் தீவிரமாக வெளிப்படுத்திவிட்ட பிறகு தணித்துக் கொள்வது வீரமல்ல. மாறாக, கோபம் ஏற்படும்போது மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு மனிதன் தனது உணர்வுகள் வெடித்துக் கிளம்பும்போது அதைக் கட்டுப்படுத்தி உறுதியாக இருந்து கொண்டால் தர்க்கம், குழப்பம் போன்றவற்றை தவிர்க்க முடியும். அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மனிதர்களின் அன்பையும் பெற்று இலட்சியத்தை எளிதாக அடையமுடியும்.

இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்ப “எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் “”கோபப்படாதே” என்ற ஒரே வார்த்தையைக் கூறிக்கொண்டிருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வுபதேசம் ஒட்டுமொத்த நற்பண்புகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் “அஷஜ் அப்த கைஸ்’க்குக் கூறினார்கள்: உம்மிடத்தில் அல்லாஹ் நேசிக்கும் இரு பண்புகள் இருக்கின்றன. அவை சகிப்புத் தன்மை, நிதானமுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் சில சந்தர்ப்பங்களில் கோபப்படுபவராக இருக்கவேண்டும். எனினும் அது தனக்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக கோபப்பட வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகள் புறக்கணிக்கப்படும்போதும், மார்க்கத்தின் மகத்துவங்கள் அவமதிக்கப்படும்போதும் கோபப்பட வேண்டும். அந்நேரத்தில் உண்மை முஸ்லிம் அல்லாஹ்வின் கட்டளைகளை அவமதித்து வரம்பு மீறி அவனது மார்க்கத்துடனும் அவனுடைய சட்டங்களுடனும் விளையாடும் பாவிகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் தனக்காக எவரையும் பழிவாங்கியதில்லை. எனினும் அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக பழி வாங்குவார்கள்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டுள்ளார்கள். மார்க்கக் கட்டளைகள் அலட்சியப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும், அதன் சட்டங்களை முறையாக நிறைவேற்றவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் சிவந்துவிடும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “நான் ஃபஜ்ருத் தொழுகைக்கு தாமதமாகவே செல்கிறேன். எங்களுக்கு தொழவைப்பவர் தொழுகையை மிகவும் நீளமாக்குகிறார்” என்று முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தது போல வேறு எப்போதும் கோபமடைந்ததே இல்லை. மேலும் கூறினார்கள், “”மனிதர்களே! நிச்சயமாக உங்களில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். உங்களில் யார் மக்களுக்கு தொழவைக்கிறாரோ அவர் தொழுகையை சுருக்கிக் கொள்ளட்டும். அவருக்குப் பின்னால் பெரியவர்களும், சிறியவர்களும், தேவையுடையோரும் நிற்பார்கள்.” ((ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, “மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்“ என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். புகாரி5954

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். “அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?“ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?“ என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்” என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), “உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள். புகாரி3475
இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களின் கோபம் வெளிப்பட்டது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் இஸ்லாம் கோபத்தை அனுமதிக்கிறது. அதாவது கோபம் சுயநலனுக்காக அல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

Related

islamic attical 2636922434077194319

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item