தொழுதேன் எனினும் தொழாதது போலிருக்கிறது!



தொழுதேன் எனினும் தொழாதது போலிருக்கிறது!
தொழுதேன் எனினும் தொழவில்லை போலிருக்கிறது!
எனது தொழுகைகளை உயிரோட்டமுள்ளதாகக் காண ஆசைப்படுகின்றேன்.
எனினும், தக்பீர் சொல்லி கையைக் கட்டிய பின் என்னை அறியாமலேயே தொழுகை முடிந்து விடுகிறது.
எப்படி ஸலாம் கொடுத்தேன் என்று விளங்காமலேயே எழுந்து சென்று விடுகின்றேன்.
சிலபோது இத்தகைய தொழுகையில் பயனில்லை என்று கூட எனது மனம் அலுத்துக் கொள்கிறது.
இதனால் தொழுகையில் பற்றும் ஈடுபாடும் குறைந்து காணப்படுவதையும் உணர்கின்றேன்.
தொழுதுவிட்டு இவ்வாறு சிலர் கவலைப்படுவதுண்டு.
அவர்கள் தொழுகையில் இன்பம் காண ஆசைப்படுகிறார்கள்.
எனினும், அது எட்டாத தூரத்தில் இருப்பது போன்றே அவர்களுக்குத் தோன்றுகின்றது.
முயற்சி செய்தும் பயன் இல்லை என அவர்களது உள்ளம் அலுத்துக்கொள்கிறது.
இத்தகையவர்களுக்கு அவர்களது ஆசை நிராசையாகிவிடாதிருக்கும் வகையில் சில ஆலோசனைகளை வழங்கலாம் என எதிர்பார்க்கிறேன், அல்லாஹ்வின் அருள் வேண்டியவனாக...
1. தொழுகைக்கு முன்...
தொழுகை பற்றிப் பேசுவதற்கு முன்பாக ஓர் ஆலோசனையை தொழுகையாளிகள் கவனத்தில் கொள்வது நல்லது என நினைக்கின்றேன். தொழுகைக்காக வரும் ஒவ்வொருவரும் தவறுகள் செய்த உள்ளத்தோடும் அதன் உறுத்தல்களோடும் அந்த உறுத்தல்களால் அமைதியிழந்த ஆன்மாவோடும் தொழுகைக்கு வராமல்... நன்மைகள் செய்து அமைதியடைந்த உள்ளத்தோடு தொழுகைக்கு வர முயற்சிக்க வேண்டும். காரணம், நன்மைகள் செய்த உள்ளம் (இஹ்லாஸோடு அவற்றைச் செய்திருந்தால்) அல்லாஹ்வை நெருங்கிய நிலையிலேயே தொழுகைக்கு வருகின்றது. அப்போது தொழுகையிலும் அல்லாஹ்வோடு இருப்பது, அந்த உள்ளத்துக்கு இலகுவாகி விடுகின்றது. பாவங்கள் செய்து அல்லாஹ்வை விட்டுத்தூரமாகிய நிலையில் தொழுகைக்கு வருகின்ற உள்ளம் அல்லாஹ்வை நெருங்குவதற்கு சிரமப்படவேண்டியிருக்கும். அல்லது சம்பிரதாயத்துக்காக குனிந்து எழுந்து விட்டுச் செல்ல வேண்டி வரும்.
இவ்வாறு கூறும்போது பாவங்கள், தவறுகளில் ஈடுபட்டவர்கள் தொழுகைக்கு வரக் கூடாது என ஒருவரும் விளங்க வேண்டாம். பாவங்கள், தவறுகளில் ஈடுபட்டவர்களும் தொழுகைக்கு வரத்தான் வேண்டும். அவர்கள் தொழுகைக்கு வரும் போது அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும், எனக்கு அருள் புரிய வேண்டும், என்னைத் தவறுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும், எனது தவறுக்காக அல்லாஹ் என்னைத் தண்டிக்காதிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடும் ஆசைகளோடும் தொழுகைக்கு வர வேண்டும். அப்போது பாவம் மற்றும் தவறுகளில் ஈடுபட்டவர்கள் கூட தொழுகையின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுகின்ற வாய்ப்பு கிட்டும்.
மேலே கூறப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் ஒருவர் தொழுகைக்கு வந்தால் அவர் தொழுகைக்கு வர முன்பதாக அல்லாஹ்வின் எண்ணமும் சிந்தனையும் உள்ளத்தில் நிரம்பப் பெற்றவராக வருகிறார் என்பது பொருள். அத்தகைய ஒருவர் தொழுகையில் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக இருப்பது சிரமமானதல்ல. மேலும் அவரது தொழுகை உயிரோட்டமானதாக அமையவும் வாய்ப்புண்டு.
தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகளின் நோக்கம் அல்லாஹ்வின் நெருக்கத்தை ஓர் அடியான் பெற்றுக் கொள்வதாகும். அல்லாஹ்வின் நெருக்கத்தை உணராத அல்லது உணர்த்தாத தொழுகை உயிரோட்டம் நிறைந்ததாக இருக்காது என்றே கருத வேண்டும். இந்த வகையில் தொழுகைக்கு வருகின்றவர்கள் தொழுகையில் மட்டுமல்லாது எப்போதும் அல்லாஹ்வுடன் நெருங்கியிருக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்வார்களாக!
2. தொழுகைக்கு வர முன்...
தொழுகைக்கு வருகின்ற ஒருவர் அதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றோர் ஆலோசனை அவர் செய்கின்ற எந்தவொரு நன்மையாயினும் அதனை அவர் முக்கியத்துவம் கொடுத்து கவனமாகச் செய்ய வேண்டும். பொடுபோக்காகவோ கவனயீனமாகவோ அக்கறையின்றியோ வேண்டா வெறுப்புடனோ அதனை நிறைவேற்றலாகாது. அது ஒரு சிறிய நன்மையாக இருந்தபோதிலும் சரியே.
ஒருவரைப் பார்த்துப் புன்முறுவல் செய்வது, ஸலாம் சொல்வது, பாதையில் நடப்பது, மஸ்ஜிதில் நுழைவது போன்ற சிறிய செயல்களிலிருந்து பெரிய செயல்கள் வரை ஒவ்வொன்றுக்கும் கவனம் கொடுத்து செய்கின்றபோதுதான் நன்மைகளில் ஆர்வம் ஏற்படுகிறது. இத்தகைய சிறிய செயல்களுக்கும் அல்லாஹ்விடம் கூலியிருக்கிறது என்ற உணர்வோடு கருமமாற்றுபவர் தொழுகைக்கும் ஒரு பாரிய முக்கியத்துவத்தை நிச்சயம் வழங்குவார். அவரால்தான் தொழுகையின் அணியில் நேராக, நெருக்கமாக நிற்க முடியும் தக்பீரையும் தஸ்பீஹையும் உணர்வோடு உச்சரிக்க முடியும் தொழுகையின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியும் அமைதியாக தொழ முடியும்.
சில மனிதர்கள் எந்த நன்மையையும் சீரியஸாகச் செய்வதில்லை. ஏனோ தானோ என்று செய்கிறார்கள. அவர்களது இந்தப் பழக்கம் அவர்களது தொழுகையிலும் தொற்றிக் கொள்வதனால் அந்தத் தொழுகைகளில் உயிரோட்டம் இருப்பதில்லை.
3. தொழுகையின் முக்கியத்துவம்
ஒரு நற்செயல் முக்கியத்துவம்மிக்கதாக மாறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
அ) ஒரு நற்செயல் மூலமாக உலகில் ஏதாவதொரு விளைவைக் காண முடியும் என்கின்றபோது அந்த நற்செயல் ஏனைய நற்செயல்களை விட முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக கஃபதுல்லாஹ்வைக் காண முடியும், அதன் சூழலில் வாழ முடியும் என்பது ஹஜ், உம்ராக்கள் போன்ற நற்செயல்களினூடாக அனுபவிக்க முடியுமாக இருக்கின்ற ஓர் அருளாகும். இந்த அருளை உலகிலேயே அனுபவிக்க முடியுமாக இருப்பது பல இலட்சங்கள் செலவு செய்வதனை இலேசாக்கி விடுகின்றது. வசதிபடைத்த பலர் ஹஜ், உம்ராக்களுக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள்.
ஆ) மொத்த சமூகமும் ஒன்றிணைந்து செய்யும்போது ஒரு நற்செயல் ஏதோவதொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. உதாரணமாக நோன்பு. நோன்பு காலத்தில் பகிரங்கமாக எவரும் உண்பதில்லை, குடிப்பதில்லை. நோன்பு நோற்க முடியாதவர்களும் நோன்பை கண்ணி யப்படுத்துகிறார்கள். நோன்பு திறக்கும் நேரத்திலும் நோன்பு நோற்கும் நேரத்திலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து நோன்பு நோற்றல், நோன்பு திறத்தல் என்ற நற்கருமங்களில் ஈடுபடுகிறார்கள். இதனைக் கண்ணுறுகின்ற நோன்பு நோற்காத ஒருவர்கூட பெரும் கவலைக்கு உள்ளாகிறார். இவ்வாறானதொரு நிலை எந்த நற்செயல்களில் எல்லாம் பிரதிபலிக்கிறதோ அத்தகைய நற்செயல்களுக்கும் மக்களிடையே ஒரு முக்கியத்துவம் வந்துவிடுகிறது.
ஜுமுஆத் தொழுகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்திலும் இதனை நாம் காணலாம். வியாபார நிலையங்களை மூடிவிட்டு மொத்த சமூகமும் பிரசன்னமாகும் ஒரு நற்செயலாக அது இருப்பதால் ஜுமுஆத் தொழுகையில் மக்களது கவனம் ஏனைய தொழுகைகளை விட அதிகமாக இருக்கின்றது.
இந்த உண்மைகளை விளங்கும் ஒருவர் ஐங்காலத் தொழுகை மக்களிடம் முக்கியத்துவம் பெறுவதற்கு அவ்வாறாயின் என்ன செய்யலாம் என்று கவலைப்படுவார்.
உண்மையில் மேற்சொன்ன காரணிகள் இல்லாத நிலையில் ஐங்காலத் தொழுகையின் முக்கியத்துவம் ஒரு மனிதனது உள்ளத்தில் உருவாகுவது சிரமமானதே, ஒரு சில மனிதர்களிடம் தவிர.
அவர்கள்தான் நிறைந்த கூட்டமோ கவரும் காட்சிகளோ இல்லாத நிலையில்ஸசிரமங்களை சகித்துக் கொண்டு ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசல் நோக்கி மழையிலும் வெய்யிலிலும் குளிரிலும் சூட்டிலும் பொறுமையோடு சென்றவர்கள். அவர்களுக்கு ஆரம்பத்தில் அது சிரமமாக இருந்தபோதிலும் நாட்கள் செல்லச் செல்ல அது ஓர் இன்பமாக மாறிவிட்டது. அவர்களால் இனி இந்த நடை முறையை மாற்ற முடியாது.
அது மட்டுமல்ல, அவர்கள் தொழுகையின் முக்கியத்துவத்தை அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் போதனைகள் மூலமாகக் கற்று தமது உள்ளங்களில் அதனைப் பசுமையாகப் பதிய வைத்துக் கொண்டவர்கள். தொழுகை மூலமாகக் கிடைக்கும் அல்லாஹ்வின் நெருக்கம் அவர்களைப் பொறுத்தவரை ஏனைய எந்த ஒன்றுக்கும் ஈடானதல்ல. எனவே, அதனை இழப்பதென்பது அவர்களால் முடியாத ஒன்று.
இந்த வகையில் அயராத முயற்சியும் மறவாத போதனைகளும் இத்தகையோரின் தொழுகைக்கு உயிரோட் டத்தை வழங்கியுள்ளன.
4. தொழுகைக்காகத் தயாராகுதல்
தொழுகைக்காகச் செல்லுதல் என்பதை விட தொழுகைக்காகத் தயாராகுதல் என்ற அம்சத்தில் உயிரோட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது எனலாம். தொழுகைக்கான அதான் ஒலித்த பிறகு தொழுகையை நினைவுபடுத்துபவரை விட தொழுகையின் நேரம் வருவதற்கு முன்பே அதற்குத் தயாராகுபவரின் தொழுகையில் உயிரோட்டம் அதிகமாகவே இருக்கும். இத்தகையோர் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வின் சிந்தனையிலிருந்தும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத் கொடுப்பதிலிருந்தம் அவர்களைத் தடுக்காது...”
வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அதான் ஒலித்த பிறகுதான் தொழுகை நேரம் வந்துவிட்டதாக உணர்வார்கள். சிலபோது வியாபாரக் கெடுபிடிகள் அதனையும் அவர்களுக்கு மறக்கடிக்கச் செய்துவிடும். எனினும், அல்லாஹ் முன்னைய வசனத்தில் குறிப்பிடுபவர்கள் அவ்வாறானவர்களல்லர். அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும்போதே தொழுகைக்குத் தயாரான மன நிலையுடனே இருப்பார்கள். நேரம் வருவதற்கு முன்பே அல்லாஹ்வின் அழைப்புக்குப் பதில் கூறக் காத்திருப்பார்கள். நேரகாலத்துடன் வுழூச் செய்து தெழுகைக்கு நான் தயார் அழைப்பு வரும் வரை எனது பிற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதே அவர்களது நிலை.
இத்தகையவர்களது தொழுகை ஆர்வமும் அதான் ஒலித்த பிறகு பரபரப்பாகச் சென்று அல்லது தாமதமாகச் சென்று வுழூச் செய்து விட்டு தொழுகைக்கு நிற்பவரது ஆர்வமும் வேறுபடத்தானே செய்யும்.
முன்னையவர் திருமணப் பந்தலுக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டு செல்லும் மணமகனைப் போன்றவராவார். இரண்டாமவர் போகின்ற போக்கில் திருமண வீட்டின் சாப்பாட்டில் கலந்து கொள்பவர் போன்றவராவார்.
5. உறுப்பமைந்த ஓதல் இருப்பமைந்த தொழுகை
தொழுகை என்பது சில ஓதல்களதும் சில அசைவுகளதும் தொகுப்பாகும். தொழுகின்றவர் தொழுகையில் ஓதும் ஒவ்வொரு சொல்லையும் பொருளுணர்ந்து ஓதி நிறைவாக உச்சரித்துஸ ஒவ்வோர் அசைவையும் தனது இரட்சகனுக்குச் செலுத்தும் வணக்கமாகக் கருதி அவசரப்படாமல் அமை தியாக நிறைவேற்றினால் அவரது தொழுகை உயிரோட்டமுள்ளதாக இருக்கும். ஓதல்களும் விளங்காமல் உச்சரிப்புகளும் உறுப்பமையாமல் அசைவுகளும் படுவேகத்தில் நகரும் ஒரு தொழுகையில் என்ன உயிரோட்டம் இருக்கப்போகிறது!
தொழுகைக்குத் தயாராகி வருகின்றவர்கள் அமைதியாகத் தொழுவார்கள், பரபரப்புகளுக்கு மத்தியில் தெழுகின்றவர் கோழி கொத்துவது போல் அவசரமாக விழுந் தெழும்பிச் சென்று விடுவர். இந்த இரு சாராரினதும் தொழுகைகள் ஒன்றாக முடியுமா? இந்த வகையில் முன்னைய தொழுகையைத் தொழ விரும்புகின்றவர், என்னைப் படைத்தவனை நான் வணங்குகிறேன் என்ற மனநிலையையும் அந்த இரட்சகனுக்கு முன்னால் ஓதும் ஓதல்களின் பொருள்களையும் அறிந்திருக்க வேண்டும். உயிரோட்ட மான தொழுகைக்கு இவை இன்றியமையாதவையாகும்.
6. பர்ளைப் போதாது என்று கருதுதல்
அமைதியாகத் தொழுதாலும் அது போதாது, எனது இரட்சகனை இன்னும் நான் வணங்க வேண்டும், அவனுக்கு முன்னால் மேலும் சிறிது நேரத்தை நான் செலவிட வேண்டும் என்று நினைக்கின்ற ஒருவருக்கே பர்ளுக்கு மேலாக சுன்னத்தையும் தொழ வேண்டும் என்ற ஆசை வருகின்றது. எனது இரட்சகனுடன் நான் இருக்கிறேன் அவனுக்கு முன்னால் பணிந்து, குனிந்து, சிரம்தாழ்த்தி அவனது பக்கபலத்தைஸ நெருக்கத்தைஸ இரக்கத்தைஸ கிருபையை நான் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் அந்தரத்தில் இருப்பவன்ஸ அவனின்றி எனக்கு அடைக்கலமில்லைஸ நான் ஆபத்துக்கள் சூழ வாழுகின்றவன்ஸ அவனின்றி எனக்கு பாதுகாப்பில்லைஸ நான் தேவையுடையவன் அவனின்றி எனக்கு ஆறுதலில்லைஸ நான்ஸ நான்ஸ என தன்னைப் பணித்தும் தனது இரட்சகனை உயர்த்தியும் பார்க்கும் ஒருவரது தொழுகை அவசரமாக முடியாதுஸ பர்ளோடு முற்றுப் பெறாது. அது முன், பின் சுன்னத்துகள்ஸ வித்ருஸ தஹஜ்ஜுத்ஸ துஆஸ இஸ் திஃபார்ஸதஸ்பீஹ்ஸ என அதிகரித்துக் கொண்டே செல்லும்.
இவ்வாறானதொரு ஏணிப்படியில் ஏறிக் கொண்டிருப்பவரது தொழுகை உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்பது வெளிப்படை. இதற்கு நேரெதிராக தக்பீர் கட்டியது முதல் ஸலாமை எதிர்பார்த்த வண்ணம் தொழுபவர்கள், ஸலாம் கொடுத்தவுடன் வில்லிலிருந்து அம்பு புறப்பட்டது போல் விர்..ர்..என்று கிளம்பிச் செல்பவர்கள் எங்கனம் தொழுகையில் உயிரோட் டத்தைக் காண முடியும்.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் அவசரமாகத் தொழுவதற்கு முறைமைகள் இருந்தாலும்கூட ஒருவரது வழமையான தொழுகை மேற்கூறப்பட்ட அமைப்பிலேயே இருக்க வேண்டும். அப்போது தொழுகை கொடுக்கின்ற இன்பம் பர்ளுகளுக்கு மேலாக சுன்னத்துக்களையும் பேணித் தொழுகின்ற பக்குவத்தை உருவாக்கும்.
7. பணிகளோடு தொழுதல்
தொழிலும் வீடும் என தனது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டவரது தொழுகையை விட மார்க்கம், சமூகம் மற்றும் இவற்றின் எதிர்காலம்ஸ அதற்கான பங்களிப்புகள் என தனது வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொண்ட ஒருவரது தொழுகை உயிரோட்டமாக இருக்கும்.
காரணம் முன்னையவருக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கெடுபிடிகள் வருகின்றபோது மட்டுமே அல்லாஹ்வின் தேவை வரும். பின்னையவருக்கு அவ்வாறல்ல. கவலைகளும் கரிசனைகளும் அவரிடம் நிறைந்திருக்கும். எனவே, அவர் அல்லாஹ்வின் தேவையை ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தவராக இருப்பார். அவர் எதிர்கொண்ட சோதனைகள்ஸ அந்தச் சோதனைகளின்போது அல்லாஹ் சொரிந்த அருள்கள்ஸ வெற்றியிலும் தோல்வியிலும் அல்லாஹ் கற்றுக் கொடுத்த பாடங்கள்ஸ பணிகளுக்காக வாழக் கிடைத்த பாக்கியம் போன்ற அனைத்தும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் முன்னிலையில் அவரை சொக்கிப் போய் நிற்க வைக்கும் பணி செய்பவரது தொழுகை.
இந்த மகோன்னத நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தொழுகையில் நிறைவாகக் காணலாம். எங்களால் அந்த நிலையை அடைய முடியாவிட்டாலும் அதில் ஒரு பங்கையாவது அனுபவிக்காமல் எப்படி ஒரு முஸ்லிமால் முஸ்லிமாக வாழ்ந்து விட்டுப் போக முடியும்?
8. அறிவுடன் தொழுதல்
இது முதன் முதலாக சொல்லப்படவேண்டிய செய்தியாகும்ஸ எனினும் இறுதியில் கூறுகின்றேன். ஒரு முறை நபி ஸல்லலலாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. “இரவு முழுவதும் விழிந்திருந்து தொழுகின்ற தொழுகை சிறந்ததா? இரவின் ஒரு பகுதி விழித்திருந்து தொழுகின்ற தொழுகை சிறந்ததா?” இந்த வினாவுக்கு பதில் கூறிய நபி (ஸல்லலலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “அறிவோடு தொழுகின்ற தொழுகையே சிறந்தது” என்றார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கம் பற்றிய தெளிவான விளக்கங்களும் அனுபவ அறிவுகளும் ஒருசேர கிடைக்கப் பெற்ற ஒருவரது தொழுகை அவை கிடைக்கப் பெறாத ஒருவரது தொழுகையை விட உயிரோட்டமுள்ளதாக இருக்கும். இதன் பொருள் தொழுகையின்போது அறிவு, ஆராய்ச்சிகளில் முன்னையவர் ஈடுபடுவார்... பின்னையவர் அறிவு, ஆராய்ச்சி இல்லாமல் தொழுதுவிட்டுச் செல்வார் என்பதல்ல. தொழுகைக்குத் தேவை அல்லாஹ்வின் மகத்துவமும் அச்சமும் நிறைந்த உள்ளமாகும். அதேநேரம் தொழுகையில் ஓதப்படுகின்ற ஓதல்களின் பொருள் மற்றும் அதன் மகத்துவங்கள் பற்றி அறிந்துணர்ந்த உள்ளமும் தொழுகைக்கு இன்றியமையாதது. இத்தகைய உள்ளத்தைப் பெற்றவர் யாராக இருக்க முடியும்? அல்லாஹ் கூறுகிறான்.
“நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வை (அதிகம்) அஞ்சுபவர்கள் அறிவுள்ளவர்களே.”
இந்த வகையில் மார்க்க அறிவும் அனுபவ அறிவும் கிடைக்கப் பெற்றவரது தொழுகை உயிரோட்டமுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அறிவு பெற்ற ஒருவரது தொழுகை அவ்வாறில்லையெனின் அவரது அறிவு அவருக்குப் பயனளிக்கவில்லை என்பது பொருள். அவர் தனது நிலை குறித்து எச்சரிக்கையோடு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஒரு தொழுகையாளியின் தொழுகை உயிரோட்டமுள்ளதாக மாறுவதற்கான சில ஆலோசனைகளே இவை. இந்த ஆலோசனைகள் எனது ஆலோசனைகள் அல்ல. நபிமார்களையும் நல்லவர்களையும் பார்த்துப் படித்த பாடங்களிலிருந்து கற்றவை. குர்ஆனும் ஸுன்னாவும் அந்த நல்லவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவை: இவைதான் அவர்களை அவ்வாறு பிரகாசிக்கச் செய்துள்ளன.
இந்த ஆலோசனைகள் எனக்கும் உங்களுக்கும் உணர்த்தும் உண்மை யாதெனில், தொழுகை தொழுகையால் மட்டும் உயிரோட்டம் பெறுவதில்லை. மாறாக, தொழுகையாளியின் வாழ்க்கைதான் அவரது தொழுகையை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகின்றது. அவரது வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களிலும் இஸ்லாம் செல்வாக்குச் செலுத்தும் போது தொழுகை உண்மையில் ஓர் இறைவிசுவாசியின் “மிஃராஜ்” தான்.

Related

islamic attical 6900001400804371765

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item