அல்குர்ஆனும் இலக்கியமும்

அல்குர்ஆனும் இலக்கியமும்
'குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன தெரியுமா?
ஓதப்பட்டது, ஓதப்படக் கூடியது, ஓதப்பட வேண்டியது. இதுவே ‘குர்ஆன்’ என்கிற வார்த்தைக்கான உள்ளார்ந்த பொருளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், எல்லா காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற வேதம் குர்ஆன்.
ஆம், அல்குர்ஆனுக்கு இதர வேதங்களை காட்டிலும் தனிச்சிறப்புகள் பல உண்டு. முந்தைய நபிமார் களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத், இன்ஜில், ஜபூர் போன்ற வேதங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதாகும்.
ஆனால் குர்ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான வேதம் அல்ல. மாறாக அனைத்துலக மக்களுக்கும் இறுதி நாள் வரை பொருந்தக்கூடிய உலக பொது மறையாகும்.
அல்குர்ஆன் உலகில் மனித சமூகத்துக்கு தேவையான அனைத்து துறைகள் குறித்தும் ரத்தின சுருக்கமாக முத்தாய்ப்பாக சொல்வதில் அமைந்துள்ள இலக்கிய இலக்கண நயம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
குர்ஆன் ஓர் இலக்கிய அதிசயமாகும். திருக்குர்ஆனின் இலக்கிய நயம் அன்றைய அரபுலக பண்டிதர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பாக குர்ஆனின் வசனங்கள் சொல்கிற இலக்கிய சவாலை சந்திக்க யாரும் அன்று முன்வரவில்லை. இனிமேலும் வருவார் இல்லை. காரணம் குர்ஆனின் இலக்கியம் மனித சக்தி அப்பாற்பட்டே நிற்கிறது.
ஆரம்பத்தில் குர்ஆன் வசனங்களை செவி மடுத்தவர்கள் ‘இதிலென்ன அதிசயம், நினைத்தால் நாங்களும் இதைப் போன்று சொல்ல முடியுமே’ என்றனர். அதை இறைவன் திருக்குர்ஆனில் அப்படியே சொல்லிக் காட்டுகிறான்.
‘நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் (இதனை முன்பே) நாங்கள் செவியுற்றுள்ளோம். நாங்கள் நினைத்தால் இதைப் போன்று பேச எங்களாலும் இயலும். இதுவெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகள் தவிர வேறொன்றும் இல்லை என அவர்கள் கூறினார்கள்’. (திருக்குர்ஆன் 8:33)
இதை தொடர்ந்து குர்ஆன் அடுக்கான அடுக்கான சவால்களை விடுத்தது. அத்தனை சவால்களும் எதிர்கொள்ள முடியாத தோல்வியாகவே அமைந்தது.
‘கூறுவீராக, மனிதன் மற்றும் ஜின் இனத்தவர் ஒன்று கூடி இந்தத் திருக்குர்ஆனுக்கு நிகரானதை வெளிக்
கொணர முயலுவார்களாயின் இதற்கு நிகரானதை அவர்களால் கொண்டு வர இயலாது. அவர்களின் சிலர் சிலருக்கு ஒத்துழைப்புச் செய்வார்களாயினும் சரியே’. (அல்குர்ஆன் 17:88).
இந்தச்சவாலை யாரும் ஏற்க முன் வராதது கண்ட திருக்குர்ஆன் தன் சவாலைச் சற்றுத் தளர்த்தியது.
‘இதை அவர் சுயமாகக் கற்பனை செய்தார் என்று அவர்கள் கூறுகிறார்களா? அப்படியானால் கற்பனை செய்யப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் பார்க்கலாம்’ என்றதுஅல்குர்ஆன் (11:13).
இந்த சவாலையும் எவரும் ஏற்க முன்வராதது கண்ட திருக்குர்ஆன் தன் சவாலை மேலும் தளர்த்தியது. ‘பத்து அத்தியாயங்களை கொண்டு வரவேண்டாம். ஒரே ஓர் அத்தியாயத்தையாவது கொண்டு வரட்டும் பார்க்கலாம்’ என்றது அல்குர்ஆன். (2:23)
இறுதியாக, ‘ஓர் அத்தியாயத்தை வேண்டாம். ஒரே ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள்’ என்றதுஅல்குர்ஆன். (52:32–33)
குர்ஆனின் சவால் அரபி மொழிக்கு மட்டும் விடப்பட்டது அல்ல. மாறாக உலகின் எந்த மொழியிலும்அல்குர்ஆனுக்கு ஈடாக இலக்கியத்தை கொண்டு வரலாம் என்பதே திருக்குர்ஆனின் சவலாகும்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு மலரில் அல்லாமா கான் பாகவி அவர்கள் திருக்குர்ஆன் குறித்து பதிவு செய்துள்ள தகவல் இது.
எகிப்து நாட்டு இலக்கியவாதியும் பெரிய எழுத்தாளருமான பேராசிரியர் கைலானி அவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் வெங்கால் நல்ல நண்பர். வெங்கால் அரபி, ஆங்கிலம், ஜெர்மனி மற்றும் ஹீப்ரு மொழிகளில் தேர்ந்தவர். இவ்விருவருக்கும் அரபு இலக்கியத்தின் மீதான நட்பு அதீதமானதாகும்.
இருவரும் ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கையில் ‘குர்ஆனை ஓர் அற்புதம்’ என்று நீங்களுமா நம்புகிறீர்கள்? என்று கைலானிடம் வெங்கால் கேட்டார். ஆனால் அதுவே பரிசோதனைக்கு காரணமாயிற்று. குர்ஆன் ஓர் இலக்கிய அற்புதம் தான் என்பதனை நிரூபிக்க கைலானி ஓர் வாய்ப்பாக பயன்படுத்தினார்.
இறுதியில் ஆய்வு தொடங்கியது. இரு அறிஞர்களும் சேர்ந்து ஒரு பொருளை தேர்ந்தெடுத்தனர். அதற்கு அவர்கள் சொல்லாக்கம் அளித்தனர். இறுதியில் அப்பொருள் தொடர்பாக குர்ஆன் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தனர். முடிவில் வியந்து போயினர். அவர்கள் சோதனைக்காக எடுத்துக் கொண்ட பொருள் ‘நரகம் எவ்வளவு பெரியது?’ என்பதை பல வாக்கியங்களில் சொல்ல வேண்டும்.
இருவரும் சேர்ந்து தங்களின் மொழித் திறனையும் இலக்கிய ஆற்றலையும் முழுவதுமாகப் பயன்படுத்தி, மூளையை கசக்கி, இனி இதற்கு மேல் இப்பொருளுக்கு வாசகம் அமைக்க முடியாது என்று சொல்லி, சுமார் இருபது வாக்கியங்களை அரபியில் உருவாக்கினர்.
நரகத்தின் அளவு மனித அறிவுக்கு எட்டாதது. நரகத்தில் முழு உலகத்தையே அடைக்கலாம். மனித இனமும் ஜின் இனமும் புகுந்தால் கூட நரகத்தில் அத்தனை பேருக்கும் இடமுண்டு. நாம் நினைப்பதை விட நரகம் மிகவும் விசாலமானது... என்றெல்லாம் வாசகங்கள் அமைத்து முடித்த பிறகு வெற்றிப் புன்னகை சிந்தினார் வெங்கால்.
இறுதியாக, குர்ஆனைப் புரட்டி இதே பொருளுக்கு குர்ஆன் அமைத்துள்ள வாசகம் என்ன என்று தேடினார்கள். ‘அன்று நாம் நரகத்தை நோக்கி உன் வயிறு நிரம்பிவிட்டதா? என்று கேட்போம். (ஆனால் நரகமோ) இன்னும் இருக்கிறதா? என கேட்கும்’. (50:30)
ஆஹா, என்ன அற்புதமான வசனம். நரகம் எவ்வளவு பெரியது? என்பதை இறைவன் இலக்கிய நயத்தோடு சொல்கிறான் என்பதை பாருங்கள். இறுதியில் வெங்கால் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இப்படி எத்தனையோ அற்புதங்கள் குர்ஆனுக்கு உண்டு. பல கோடி பக்கங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.
இத்தகைய சிறப்புகளை தாங்கியுள்ள குர்ஆனை அறிந்தவரும் அதனை ஓதுபவரும் மேன்மை பெறுகிறார். திருக்குர்ஆனை தானும் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் மிகச் சிறந்தவர் என்றார்கள் நாயகம்.
என்னை ‘திக்ர்’ செய்வதையும், என்னிடத்தில் பிரார்த்தனை செய்வதை விட்டு விட்டு, யார் குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டுள்ளாரோ அவருக்கு, என்னிடத்தில் கேட்போருக்கு நான் வழங்குவதை விட சிறந்த ஒன்றையே நான் வழங்குவேன் என இறைவன் கூறுவதாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இறைவேதமான குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை கற்றுக் கொள்பவரை அவ்வசனம் புன்னகை பூத்த முகத்துடன் நாளை மறுமை நாளில் வரவேற்கும் என்பது நபிமொழியாகும்.
‘அபூஹுரைராவே, குர்ஆனை நீர் கற்று, மக்களுக்கு அதனைக் கற்றுக் கொடுப்பீராக. உமக்கு மரணம் வரும் வரை இவ்வாறே இருந்து வருவீராக. இந்நிலையில் நீர் மரணமடைந்து விட்டால் கஅபத்துல்லாவை மக்கள் தரிசிப்பது போல உம்முடைய அடக்க ஸ்தலத்தை வானவர்கள் தரிசிப்பார்கள்’ என்றார்கள் நாயகம்.
ஒரு சமூகத்தை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது கண்டிப்பாக வேதனையை அனுப்புவதற்கு இறைவன் முடிவு செய்வான். ஆனால் அரபி பாடசாலைகளில் பயின்று கொண்டிருக்கும் குழந்தைகள் ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என ஓதுவதை கேட்டு இறைவன் அச்சமூகத்தின் மீதான வேதனையை நாற்பதாண்டுகள் அழிக்காமல் விட்டுவிட்டான் என்றார்கள் நாயகம்.
ஹஜ்ரத் இக்ரிமா என்கிற நபிதோழர், திருக்குர்ஆனை ஓதிடும் போது பல நேரங்களில் உணர்விழந்து கீழே சாய்ந்து விடுவார்களாம். ‘ஹாதா கலாமு ரப்பி’ (இது என் இறைவனின் மறையாகும்) என அவர்களின் நாவு முணுமுணுத்துக் கொண்டிருக்குமாம்.
யாசீன் அத்தியாத்தில் இடம் பெற்றுள்ள ‘பாவிகளே இன்றைய தினம் நீங்கள் நல்லடியார்களை விட்டு பிரிந்து நில்லுங்கள்’ என்கிற வசனத்தை இரவு முழுவதும் ஓதி ஓதி உள்ளம் உருகி நிற்பார்களாம்.
இவ்வளவு மேன்மைகளை தாங்கியுள்ள திருக்குர்ஆனை அதன் ஓதும் முறையறிந்து பொருளுணர்ந்து உள்ளச்சத்தோடு ஓதுவோம், இறையருள் பெறுவோம்.

Related

islamic attical 1667812260668356614

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item