அல் ஹதீஸ் - தும்மினால்
http://sukrymuhajiree.blogspot.com/2016/04/blog-post_79.html
அல் ஹதீஸ் - தும்மினால்....
தும்மினால்....
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால், அதைக் கேட்ட அனைத்து முஸ்லிமின் மீதும் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது. கொட்டாவி விடுதல் என்பது, ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அதை முடிந்த அளவுக்கு தடுத்துக் கொள்ளட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர் தும்மினால் அவர், ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறட்டும்! அவரின் சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறட்டும்! யர்ஹமுகல்லாஹ் என அவருக்கு ஒருவர் கூறினால், தும்மியவர், ''யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹுபாலகும்'' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக! உங்கள் நிலையை சீராக்குவானாக) என்று கூறட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' எனக் கூறுங்கள். அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறவில்லையானால், அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' கூறாதீர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (நூல்: முஸ்லிம்)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் இரண்டு நபர்கள் தும்மினார்கள். அவர்களில் ஒருவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறி துஆச் செய்தார்கள். மற்றொருவருக்கு துஆச் செய்யவில்லை. தனக்கு துஆச் செய்யாத நிலையில் உள்ளவர் ''இன்ன மனிதர் தும்மினார். அவருக்கு நீங்கள் ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறி துஆச் செய்தீர்கள். நான் தும்மினேன். எனக்கு துஆச் செய்யவில்லையே'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். ''இவர் ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார். நீர் அல்லாஹ்வை புகழவில்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தும்மினால் தன் கையை அல்லது தன் துணியை தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்து) குறைத்துக் கொள்வார்கள். (நூல்: அபூதாவூது, திர்மிதீ)
அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் தன் கையால் தன் வாயை மூடட்டும். நிச்சயமாக ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான்'' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (நூல்: முஸ்லிம்)