அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

Image result for நோன்பின் சட்டங்கள்
ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :

யா அல்லாஹ்..!(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான, குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!

நெடிதுயர்ந்த உடலும், நல்ல உடலமைப்பும், சிவந்த கன்னங்களும், சுருள் முடிகளையும், பிரகாசமான முகத்தோற்றத்தையும், இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.

தமத்துல் ஜந்தல் என்னும் போருக்கு தளபதியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைமைப் பொறுப்பை பறைசாட்டக் கூடியதற்கான தலைப்பாகையை அணிவிக்கப்பட்டவரும் ஆவார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த சத்திய அழைப்பை ஏற்று, தனது 30 வது வயதில் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இருமுறை ஹிஜ்ரத் செய்த - அதாவது ஒருமுறை அபீசீனியாவிற்கும் இன்னொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து சென்ற நற்பேற்றுக்கும் உரியவராவார்.

இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் அப்து அம்ர் என்ற பெயருடன் இருந்தவரை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் என மாற்றினார்கள். அதன் பிறகு மக்கள் இவரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்றே அழைக்கலானார்கள். சிறந்த புத்திகூர்மையையும் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன்பிலிருந்தே மதுபானம் அருந்துவதை வெறுத்தொதுக்கிய நற்குணத்திற்குச் சொந்தக்காரராவார்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பொழுது அவர்கள் வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எந்தவித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், சஅத் பின் ரபீஈ அன்ஸாரீ (ரழி) என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக் கண்ணியப்படுத்திய சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள் :

சகோதரரே..!

இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும், இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும், இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும், நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன், அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் இப்பொழுது என்னுடைய இஸ்லாமிய சகோதரராக இருப்பதின் காரணமாக உங்களது வாழ்வில் நல்லனவற்றை நாடுவதும், ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் உங்களது தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு இஸ்லாம் நமக்குக் காட்டித்தந்திருக்கின்ற வழிமுறையும், சமூகக் கடமையுமாகும் என்று கூறினார்கள்.

இத்தகைய தியாகமிக்க வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களை இஸ்லாமிய வரலாற்றில் அன்றி வேறு எங்கு காண முடியும்?!

ஆனால், கண்ணியமும், சுயமரியாதையும் கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், அவர் கூறினார் :

அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! இன்னும் உங்களது உடமைகளிலும், உங்களது குடும்பத்தினர் மீதும், உங்களது குழந்தைகளின் மீது அருள்பாலிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு வணிகச் சந்தைக்கான வழியைக் காட்டுங்கள். எனது வாழ்வாதாரத்தை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு ஒரு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

அதன் பின் வணிகச் சந்தைக்கான வழியை அறிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அவர் எப்பொழுது தனது சொந்த வியாபாரத்தைத் தொடங்கினாரோ அப்பொழுதிலிருந்து இறைவன் அவரது வியாபாரத்தின் மீது அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.

ஒருநாள் மாலை நேரத்தில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மானே..! உங்களது தோற்றத்தில் நான் ஒரு வித்தியாசத்தைக் காணுகின்றேனே..! என்று கூறினார்கள்.

மரியாதையோடும், அன்போடும் .. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

நீங்கள் எவ்வளவு மணக்கொடை கொடுத்துத் திருமணம் புரிந்தீர்கள். ஒருகட்டித் தங்கத்தைக் கொடுத்துத் திருமணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

திருமண வலிமா விருந்து கொடுத்தாகி விட்டதா? இல்லையெனில், ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்து கொடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களின் வியாபாரத்தில் இறைவன் தனது பூரண அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்துச் சென்றன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தான். வியாபாரத்தை அடுத்து, விவசாயத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார். மிகப் பரந்த அளவில் விவசாயத்தை ஆரம்பித்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு, கைபரில் ஒரு பெரிய நிலத்தையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். ஜர்ராஃப் என்ற இடத்தில் இருந்த அவரது நிலத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காகவே, அவரிடம் 20 ஒட்டகங்கள் இருந்தன. இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சம்பர்த்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும், இத்தனை சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை, அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர் ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் :

''அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;'' 
என்று கூறினார்கள்.

இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயம் தீனுல் இஸ்லாத்தில் புடம் போடப்பட்ட தங்கங்களாக பரிணமிப்பதற்குப் பேருதவி செய்த அந்த வல்லோனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது ஆரம்ப நாள் முதல் இறுதி நாள் வரையும், கணக்கில்லாமல் தனது சொத்துக்களை தானம் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு தானமாக வழங்கினாலும், அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவற்றை வெட்டி, அவரது சந்ததியினரிடையே பங்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார். இவ்வளவு செல்வ வளங்களையும் பார்த்து சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, எப்பொழுதும் மறுமை நினைவிலேயே, அதன் எதிர்பார்ப்பிலேயே கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

ஒருமுறை அவர் நோன்பு திறப்பதற்காக வேண்டி அவருக்கு முன் தட்டில் உணவு வைக்கப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட உணவுத் தட்டுக்களைப் பார்த்தவுடன், அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது.

முஸ்அப் பின் உமைர்..! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள்,

நீங்கள் இறந்த பொழுது உங்களது உடலை மூடுவதற்கு சரியான அளவில் ஆடை கிடைக்கவில்லை. கிடைத்த அந்த சிறிய ஆடையைக் கொண்டு தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. இந்த உலகம் அவருக்கு மிகப் பெரிய செல்வ வளத்தைக் கொண்டு அவரை மகிழ்விப்பதற்காக தயாராகத் தான் இருந்தது. அவருக்கு வழங்கிய இறைவனது அருட்கொடைகளைக் கொண்டு அவர் இறைவனைப் பயந்தார், அந்த அருட்கொடைகளில் தன்னை இழந்து விடாமல், இறைவனது மறுமையில் கிடைக்கக் கூடிய அளவில்லாத அருட்கொடைகளின் மீது ஆசை வைத்தார். இதனை அவர் நினைத்த மாத்திரத்திலேயே வெட்கம் மேலிட பயத்தால், அழுக ஆரம்பித்து விட்டார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள். அதன் காரணமாக தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவைக் கூட அவரது கரங்கள் தீண்டாமலேயே இருந்தது.

மறுமைக்காகத் தங்களது இவ்வுலக வாழ்க்கையைத் தியாகம் செய்த அந்த நல்லுலங்களின் சிறப்பான குணங்களுக்கு இவையே மிகச் சிறந்த சான்றுகளாகும். ஒருமுறை இவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர், அப்துர் ரஹ்மானே..! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது, ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? உங்களது கண்களில் கண்ணீர் வழிகின்றன, இன்னும் நீங்கள் கவலை தோய்ந்தவர்களாக இருக்கின்றீர்களே? காரணமென்ன என்று வினவினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள்,

இந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளராக இருந்து, இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்று விட்ட நம் தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது குடும்பத்திற்காக எதனையும் விட்டு விட்டுச் செல்லவில்லை. மிகவும் எளிமையான அளவில் கூட, இன்னும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உணவைக் கூட அவர்கள் விட்டு விட்டுச் செல்லவில்லை. ஆனால் நாம் இப்பொழுது செல்வ வளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து அருட்கொடைகளையும் சுகிக்கும்படி நம்மை விட்டு விட்டு, மறுமையில் நம்மை அனாதரவாக விட்டு விடாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன், என்று அவருக்கு பதில் கூறினார்கள்.

அவர்கள் இந்த உலக வாழ்க்கையும், மறுமையையும் நினைத்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் என்னவென்று சொல்வது..! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தனது வியாபாரம் மற்றும் விவசாயப் பணிகளுக்கிடையேயும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக ஜிஹாதில் கலந்து கொண்டார்கள். ஒரு போரில் கலந்து கொண்ட அவர் இஸ்லாத்தின் பிரதான எதிரியாகத் திகழ்ந்த உமைர் பின் உஸ்மான் என்பவனை தீரத்துடன் துணிந்து அவனது தலையைக் கொய்து பெருமைபடைத்தார்கள்.

இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, இரு வீரச் சிறுவர்களான மஆத் மற்றும் மாஊத் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களிடம் வந்து, அபு ஜஹ்ல் என்பவன் எங்கே, அவன் எந்த இடத்தில் இருக்கின்றான் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவனிடம் உங்களுக்கு என்ன வேலை? என்று அந்தச் சிறுவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் வினவினார்கள். அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகத் தொல்லை கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம், அவனை எங்களது கரங்களால் கொன்று நிரந்தரமாக அந்த நரகத்தின் அடித்தளத்திற்கு அனுப்ப விரும்புகின்றோம் என்று அந்த வீரச் சிறுவர்கள் பதில் கூறினார்கள். அந்தச் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அபூ ஜஹ்ல் மிகவும் கோபாவேசமாக இவர்களை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், உங்களது இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது என்று அபூ ஜஹ்லை அந்தச் சிறுவர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். அவனை அடையாளம் காட்டியது தான் தாமதம், மின்னலெனப் பாய்ந்த அந்தச் சிறுவர்கள் தொடுத்த இடி போன்ற தாக்குதலால் நிலை குலைந்த அபூ ஜஹ்ல் தனது குதிரையிலிருந்து விழுந்து உயிரை விட்டான். அந்த சிறுவர்களது வீரத்தை என்னவென்று சொல்வது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அளவற்ற அந்தப் பாசம் தான் அவர்களது வீரத்திற்கு வித்திட்டது. அபூ ஜஹ்லை எதிர்க்கும் வலிமையைத் தந்தது. இந்த இளம் வயதில் இஸ்லாத்தின் கொடிய எதிரியை எதிர்க்கும் மன வலிமையைத் தந்ததே இஸ்லாத்தின் அளப்பரிய ஆற்றலின் உந்து சக்தியாகும்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு தாமத்துல் ஜன்தல் என்ற இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பனூ கலப் என்ற குலத்தவர்கள் வசித்து வந்தார்கள், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டார்கள். இந்தப் படைக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தலைவருக்கான தலைப்பாகையையும் அணிவித்து, அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள்.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழையுங்கள். அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும். அவ்வாறு அவர்கள் இஸ்லாத்திற்குள் வரவில்லை என்றால், அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால் அங்குள்ள வயதானவர்களைத் தாக்க வேண்டாம், பெண்களையும் குழந்தைகளையும் தாக்க வேண்டாம் கவனமாக இருக்கவும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், அந்த மக்களிடம் மூன்று நாட்கள் இருந்து மிகவும் அழகான முறையில் இஸ்லாத்தின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள். அந்தக் குலத்துத் தலைவனாக இருந்த அஸ்பக் பின் அம்ர் குல்பி, கிறிஸ்துவத்தை மிகவும் நேசித்துக் கொண்டிருந்த அவர், இஸ்லாத்தின் கொள்கையால் கவரப்பட்டார், பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்ததன் காரணமாக, அதனால் தாக்கமுற்ற அவரது குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் அவர்களில் எவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா என்ற பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இன்னும் அந்த குலத் தலைவர் தனது மகளை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் அமைதியான பிரச்சாரப் பணியின் மூலமாக போர் இல்லாது, எந்தவித உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் அந்தப் பகுதி மக்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

இஸ்லாமிய அழைப்புப் பணி

இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக கணக்கு வழக்கின்றி, அளவில்லாமல் அள்ளிக் கொடுத்து சேவை புரிந்து வந்தார். செல்வத்தை இவ்வாறு தானம் செய்ததன் காரணமாக, இஸ்லாமிய வீரர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஒருமுறை இஸ்லாமிய வீரர்கள் போரில் பயன்படுத்துவதற்காகவென்றே ஐநூறு குதிரைகளை வாங்கினார். இன்னுமொரு முறை முழுக்க முழுக்க அரபு இனத்தில் பிறந்த ஐம்பதாயிரம் குதிரைகளை இஸ்லாமிய வீரர்கள் பயன்படுத்துவதற்காகவென்று வாங்கினார்.

அவர் இறப்பதற்கு முன்பாக தன்னிடம் இருந்த அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்தார். இன்னும் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் ஐநூறு திர்ஹம்களை பரிசாக வழங்கினார். இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக அடிக்கடி பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

யா அல்லாஹ்..! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு உனது சுவனத்தில் உள்ள சல்சபீல் என்னும் ஓடையில் ஓடும் தூய நீரைப் பருகச் செய்யும் பாக்கியத்தை வழங்குவாயாக!

இன்னும் இந்த பூமியிலே வாழ்ந்த எண்ணற்ற மக்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் நற்பேறு பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே தனது ஆருயிர்த் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு சுவனம் உண்டென்று நற்செய்தி வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு தளபதியாக நியமிக்கப்பட்ட பெருமையையும், சுவனத்திற்காக நற்செய்தி வழங்கப்பட்ட பெருமையையும், ஆயிஷா (ரழி) அவர்களால் பிரத்யேகமாகப் பிராத்திக்கப்பட்டவருமான, இத்தகைய பாக்கியத்தைத் தவிர வேறு எது தான் ஒருவருக்கு இந்த உலகத்தில் வேண்டும்?

இதுவே அவர் செய்த பெரும் பாக்கியம் தானே..!

தபூக் யுத்தம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்காக வேண்டி முஸ்லிம் வீரர்களைத் தயாராகும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையினை அடுத்து, அந்தப் போருக்காக வேண்டி மிகப் பெரிய பொருளாதார வளமும் தேவைப்பட்டது. அதனையும் முஸ்லிம்களிடம் முறையிட்டார்கள். ஏனென்றால் மிக நீண்ட தூரம் பயணம், அந்தப் பயணத்தில் வரக் கூடிய வீரர்களுக்கான உணவு மற்றும் செலவினங்களுக்கு அதிகப் பொருளாதாரம் தேவைப்பட்டது. ஆனால் பயணத்திற்குத் தேவையான பொருள் வளமும், ஒட்டகம், குதிரை போன்ற வாகன வசதியும் மிகவும் குறைவாகவே முஸ்லிம்களிடம் இருந்தது. இதன் காரணமாக, வருவதற்கு விருப்பம் கொண்டிருந்த பலர் வாகன வசதியின்மை காரணமாக மதீனாவிலேயே தங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியது. தங்களால் வர இயலவில்லை என்னும் மனக் கவலையின் காரணமாக பலர் அழுத நிலையில் இருந்து கொண்டிருந்தனர். தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளும் பேறும், அதனுடைய நற்கூலியும் நமக்குக் கிடைக்கவில்லையே என்னும் வருத்தம் அவர்களை மேலிட்டது. எனவே, இந்தப் போருக்கு ஜய்ஸே உஸ்ரா - அதாவது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உருவான படை என்ற புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் போருக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காக முஸ்லிம்கள் தாராளத்தன்மையைக் காட்டும்படி வேண்டி நின்றார்கள்.

இந்தப் போரிலும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் மிகவும் தாராளமாக பொருளுதவி செய்தார்கள். ஒரு பை நிறைய வெள்ளிக் கட்டிகளைக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்தார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே..! இஸ்லாமிய வரலாறு தவிர வேறு எங்கும் இவர்களைப் போன்றதொரு கொடையாளிகளை, தங்களது இவ்வுலக வளங்களைத் தானமாகக் கொடுத்து, மறுவுல அருட்கொடைகளுக்கு ஆசை கொண்டவர்களைப் பார்க்க இயலாது.

இப்பொழுது, இஸ்லாமியப் படை தபூக் நோக்கி நகர்ந்த பொழுது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் அந்தப் படையில் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம் படை ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி ஓய்வெடுத்த பொழுது, அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இல்லாத காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் முன்னிற்க தொழுகை நடத்தப்பட்டது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, இடையில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடைத்தன்மைக்கும், பரிசுத்த ஆன்மாவுக்கும், நேர்மைக்கும் பெயர் போன தனது ஆருயிர்த் தோழரைப் பின்பற்றி தொழ ஆரம்பித்தார்கள்.

இத்தகைய அருமையான பாக்கியமும் கௌரவமும் வேறு யாருக்குத் தான் கிட்டும்! இத்தகைய மாபெரும் கௌரவத்தை தனது ஆருயிர்த் தோழருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்கள். இந்தப் பூமியில் வந்துதித்த இந்த மனிதப் புனிதர்களை பூமிக்கும் மேலாக இருக்கக் கூடிய அந்த ஏழு வானங்களுக்கு அப்பாலும், இன்னும் அதற்கும் மேலானதொரு உயர்தரமான சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியமிக்கவர்களாக உயர்த்திக் காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

மக்கா வெற்றி

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வரலாற்றுச் சம்பவமான மக்கா வெற்றியின் பொழுதும், இன்னும் அதனை அடுத்து ஹஜ்ஜத்துல் வதா என்ற இறுதி ஹஜ்ஜின் பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உடன் இருந்த நற்பேறு பெற்றவருமாவார்.

ஹிஜ்ரி 10 ம் ஆண்டு, இறைவனது அழைப்பின் பேரில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அதன் பின் இஸ்லாமிய உம்மத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது யார் என்றதொரு பிரச்னை எழுந்த பொழுது, அந்தப் பிரச்னையைத் தீர்த்து அபுபக்கர் (ரழி) அவர்களை தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வருவதற்காக, முக்கியப் பங்காற்றியவர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

பின் அபுபக்கர் (ரழி) அவர்கள் மரண தருவாயில் இருந்த பொழுது, தனக்கு அடுத்த யாரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதற்காக, அபுபக்கர் (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகே, உமர் (ரழி) அவர்களது பெயரை அடுத்த கலீபா பதவிக்காக முன்மொழிந்தார்கள். உமர் (ரழி) அவர்கள், தொழுகையில் இமாமாக நின்று கொண்டு தொழ வைத்துக் கொண்டிருந்த பொழுது தாக்கப்பட்டு, கீழே விழுந்தவுடன் உடனடியாகச் செயல்பட்டு,இமாமாக முன்னின்று தொழுகையை நடத்தியவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) ஆவார்கள். தொழுகையை முடித்துக் கொண்டவுடன், உடனடியாக உமர் (ரழி) அவர்களை அவரது இல்லத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அப்பொழுது, உங்களுக்கு அடுத்து தலைமைப் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பதனை அறிவித்து விடுமாறு உமர் (ரழி) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்.

அப்பொழுது ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியை அமைத்து அவர்களுக்குள் ஒருவரை மூன்று நாட்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உமர் (ரழி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அந்த ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

உமர் (ரழி) அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டதன் பின் இரண்டாம் நாளில், அடுத்த கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனை நடத்தப்பட்டது. ஆறு பேர் கொண்ட கமிட்டிக்குப் பதிலாக அதனை மூன்றாகக் குறைத்துக் கொள்ளுமாறு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின், தல்ஹா (ரழி) அவர்கள் தனது இடத்தை உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களுக்காக விட்டுக் கொடுக்க, அலி (ரழி) அவர்களுக்கு ஆதரவாகத் தனது இடத்தை சுபைர் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுக்க, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக சஅத் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். இதில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது இடத்தை தானே விட்டுக் கொடுத்து, தனது வாக்கை உதுமான் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக வழங்கியதன் காரணமாக, மிகவும் எளிய முறையில் பிரச்னைகள் இன்றி, புதிய கலீபாவாக உதுமான் (ரழி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

உதுமான் (ரழி) அவர்களது கரங்களில், முதன் முதலில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களே வழங்கினார்கள். இதன் மூலம் இந்த உம்மத்தை அலைக்கழிக்கக் கூடிய பிரச்னைகள் பல எழுந்த பொழுது, அதனை சாதுர்யமாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடனும் தீர்த்து வைத்த பெருமைக்குரியவர்களாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அமீருல் முஃமினீன் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன், எனக்குப் பின்னால் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான எனது மனைவிமார்களை நாணயமும், நம்பிக்கையும், நேர்மையும், தூய்மையான சிந்தனையும் கொண்ட ஒருவர் பாதுகாக்கக் கூடியவராக இருப்பார். அந்த வகையில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) தனது கடமையைச் சரியாகச் செய்தார் என்று உதுமான் (ரழி) அவர்கள் குறிப்பிடக் கூயடிவர்களாக இருந்தார்கள்.

ஒரு ஹஜ்ஜின் பொழுது, இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு சரியாக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பயண நெடுகிலும் அவர்களது தனிமைக்காக வேண்டிய பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த ஹஜ் நெடுகிலும் அவர்களது கண்ணியத்தையும், கௌரவத்தையும் பேணிப் பாதுகாக்கும் விதத்தில் அத்தனை ஏற்பாடுகளும் அமைத்திருந்தார். இத்தனையையும், அவர்கள் தனக்காக பிரத்யேகமாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தார்.

உதுமான் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். உதுமான் (ரழி) அவர்கள் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related

islamic attical 2559554957589829577

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item