நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்

Image result for நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்
அல்லாஹ்வின் கிருபையால் ரமழானை சந்திக்கும் வாய்ப்பினை அல்லாஹ் நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)
இந்த இறக்கட்டளையில் ரமழான் மாதத்தின் சிறப்பையும் அதன் காரணத்தையும் விசுவாசிகள் நோன்பு நோற்பது கட்டாயக்கடமை என்பதையும் தெளிவாக விளக்கி விட்டான். இன்று முஸ்லிம்களில் எத்தனைபேர் இதனை செயல்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வே “உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; ” என்று கூறிய பின்னரும் இன்று முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு ரமழானில் நோன்பு நோற்பது இலகுவானதாக தெரிகிறது? எத்தை பேர் நோன்பு நோற்காமல் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
நோயாளிகளாக, பயணிகளாக இருப்பவர்களை விட்டு விடுங்கள். அவர்களுக்கு பின்னால் நோற்றுக் கொள்ளும்படி சலுகை அளித்துள்ளான்.  நல்ல திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும், பிரயாணத்தில் இல்லாமல் உள்ளூரிலேயே இருந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் இந்த நோன்பை நோற்பதற்கு சிரமமானதாகத்தானே தெரிகிறது. ரமழானில் நோன்பை விட்டுவிடுவது மட்டுமல்லாமல் பகிரங்கமாக பீடி சிகரெட் ஊதித் தள்ளுவதும் காபி டீ என குடிப்பதுமாக பெரும்பான்மை முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களது அறிவில் நோன்பு நோற்பது சிரமமான செயலாக தெரிகிறதே அல்லாமல் எளிதான செயலாகத் தெரியவில்லை.
ரமழானில் நோன்பு நோற்பது ஏன் சிரமமான காரியமாகத் தெரிகிறது நோன்பின் மூலம் அல்லாஹ் மனிதனின் இயற்கை அத்தியாவசியத் தேவைகளான உண்பது, குடிப்பது, போகிப்பது போன்ற இன்பங்களிலிருந்து தற்காலிகமாக தடுத்து வைத்துள்ளான். அல்லாஹ்வின் இக்கட்டளையை யார் வாழ்வதற்காக இம்மூன்று காரியங்களை செய்கிறார்களோ அவர்களுக்கு எளிதாக இருக்கும்.
அதற்கு மாறாக யார் இம்மூன்று காரியங்களையும் செய்வதற்கென்றே வாழ்கிறார்களோ அவர்களுக்கு நோன்பு நோற்பது மிகமிக கடினமான காரியமாகவே தெரியும். ஆக அவர்கள் இவ்வுலக வாழ்க்கை ஒரு சோதனை என்பதை மறந்து வாழ்கிறார்கள்.
பள்ளியில் படிக்கும் காலங்களில் பள்ளிக்கு படிக்கவே நாம் வருகிறோம். எனவே சாப்பிடுவது, குடிப்பது உறங்குவது, கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காரியங்கள் நமது அசல் நோக்கமல்ல. தேவைக்கு மட்டுமே அவற்றில் ஈடுபட்டுவிட்டு அதிகமான நேரத்தைப் படிப்பதிலேயே செலவிடவேண்டும் என்று புத்திசாலித்தனமாக  விளங்கிப் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்தியவர்கள் நன்றாகப் படித்து தேறி நாளை உயர்ந்த பதவிகளை அடைந்து உல்லாச வாழ்க்கை வாழமுடியும்.
அதற்கு மாறாக அறிவு குறைந்த மாணவர்கள் தனது பெற்றோர்கள் தான் படிக்கும் காலங்களில் எனக்கு  அனுபவிப்பதற்கென்றே பணம் அனுப்பியுள்ளனர்.  இப்போது அனுபவிக்காவிட்டால் வேறு எப்போது அனுபவிப்பது? பெற்றோர்கள் மாதா மாதம் பணம் அனுப்பி வைப்பது நாம் அனுபவிக்கத்தானே என குறுகிய எண்ணத்தில் படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் ஜாலியாக ஈடுபட்டு சந்தோசமாக நாட்களைச் செலவிட்டான். அப்போது தெரியுமா அதனால் ஏற்படும் நஷ்டங்கள்?  பள்ளி இறுதி ஆண்டில் பரிட்சையில் தோல்வியுற்று அதனால் பல இழப்புகளை சந்த்தித்து பெற்றோருக்குப்பின் முறையான வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி பெருங்கஷ்டங்களை அனுபவிக்கும்போதுதான் தான் செய்தது மிகப்பெரிய தவறு என்பதை உணர்வான்.  ஆனால் காலம் கடந்து வருந்துவதால் இப்போது பலனளிக்கவா போகிறது?
இது போல் அசலான மறு உலக வாழ்க்கையை மறந்து அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வாழ்க்கையை பெரிதாக நினைத்து இங்கு அனுபவிப்பதையே பெரும் பேறாக கருதி செயல்படுகிறவன் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்தும் வாழ முடியும். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்காமல் அதனால் ஏற்படும் இழப்பு, மாணவனுக்கு படிக்கும் காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏற்படும் இழப்பு அவன் வெளி உலகைச் சந்திக்கும்போது அதன் நஷ்டத்தை உணர்ந்து கொள்வானோ அதே போல் இவனும் இந்த நஷ்டத்தை மறு உலகில் காணப்போகிறான்.
புத்திசாலி மாணவன் படிக்கும் காலத்தில் எப்படி தான் படிக்க வந்த நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு உண்பதிலும், குடிப்பதிலும், உறங்குவதிலும் கேளிக்கைகளில் ஈடுபடுவதிலும் தனது பொன்னான நேரத்தை வீணாக்காமல் படிப்பிலேயே குறியாக இருந்து படித்து முதல் மாணவனாகத் தேறி உயர்ந்த உத்தியோகத்தை அடைந்து தனது எதிர்கால வாழ்க்கையை வழமாக ஆக்கிக் கொள்கிறானோ அதே போல் புத்திசாலியான முஸ்லிம் இவ்வுலக வாழ்க்கை பரிட்சை வாழ்க்கை, மறு உலக வாழ்க்கையே அசலான வாழ்க்கை, அந்த வாழ்க்கைக்காக இவ்வுலகில் தயாராகிக்கொள்வதே அறிவான செயல். இவ்வுலகில் தோல்வியுற்ற மாணவனாவது திரும்பத் திரும்ப பரிட்சை எழுதி வெற்றி பெற முடியும். ஆனால் இவ்வுலக வாழ்வுப் பரிட்சையில் ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும், அதில் தோல்வியுற்றால் மீண்டும் பரிட்சை எழுதும் வாய்ப்பே இல்லை. தோல்வியடைந்தால் அதற்கு அப்பீலே இல்லை என்பதை நன்றாகப் புரிந்து நடந்து கொள்வான்.
மனிதனை சோதித்து அறியவே இவ்வுலக வாழ்க்கையில் மனித வாழ்வு ஆதாரங்களான  உண்பது, குடிப்பது, போகிப்பது போன்ற மிக மிக அத்தியாவசிய தேவைகளையே தடுத்து நோன்பு நோற்கக் கட்டளையிட்டுள்ளான். மனிதன் இவ்வுலகில் செய்யும் அட்டூழியங்கள் தவறுகள் பாவமான காரியங்கள் இவை அனைத்தும் கண்டிப்பாக உண்பது, குடிப்பது, போகிப்பது இம்மூன்று அடிப்படைக் காரியங்களைக் கொண்டு ஏற்படுவனவாகவே அமைகின்றன.  மனிதன் இம்மூன்று விஷயங்களில் கட்டுப்பாட்டை மீறி எல்லை கடந்து செல்வதாலேயே இன்று உலகில் காணப்படும் தீயச் செயல்களில் எதை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்றில் ஒன்றின் அடிப்படையிலேயே இருக்க முடியும்.
எனவே மனிதன் இந்த மூன்று காரியங்களில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் அவன் மனிதப் புனிதனாக மாறிவிடுவான். அதைத்தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)
அல்லாஹ்விற்காக  அத்தியாவசியத் தேவைகளான சாப்பிடுவது, குடிப்பது, போகிப்பது போன்றவற்றையே தியாகம் செய்து அவற்றை விட்டு ஒதுங்கி இருக்கும் மனிதன் மற்ற அற்பமான காரியங்களில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறாக நடந்து கொள்வானா? ஒரு போதும் அவ்வாறு செய்ய துணியமாட்டான். எனவே அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பதிலும் ஆகுமான காரியங்களைச் செய்வதிலும் விளக்கப்பட்ட காரியங்களிலிருந்து விலகிக் கொள்வதிலும் நல்லதொரு பயிற்சியை நோன்பு நோற்பது கொண்டு அடைய முடியும்.

Related

islamic attical 2908509752682013724

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item