வீண் விரயம்
http://sukrymuhajiree.blogspot.com/2016/05/blog-post_32.html
வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:26,27)
உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது உம்முடைய கையை கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்; அன்றி உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர். அல்குர்ஆன் (17:29)
நாம் நம் வசதிக்கேற்ப அதிகமான பணம் வீண் விரயம் செய்யப்படுவதை நம்மால் காணமுடிகிறது. அவரவர்களைச் சார்ந்தவர்களால் திரட்டப்படும் பொருளாதாரமும் பல ஊர் பள்ளிவாசல் ஜமாஅத் மூலமாக திரட்டப்படும் பொருளாதாரமும் இஸ்லாம் காட்டித்தராத முறையில் செலவு செய்யப்படுகிறது. பணத்தை கொடுக்கும் நல் உள்ளம் கொண்ட சகோதரர்களும் வசதி மிக்க கொடை வள்ளல்களும் நாம் கொடுக்கும் பணம் இஸ்லாம் அனுமதிக்கும் வழியில் செலவு செய்யப்படுகிறதா? அல்லது அதற்கு மாற்றமாக அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வகையில் செலவு செய்யப்படுகிறதா? வீண் விரயத்திற்காக செலவு செய்யப்படுகிறதா? என்பதை அறிய தவறிவிடுகிறார்கள்.
யாரும் சதக்கா, ஜகாத், தர்மம் கேட்டால் அன்பளிப்பு கேட்டால் உடனே கொடுத்து விடுகின்றனர். மற்றும் சிலரோ பேருக்காகவும், புகழுக்காகவும் தர்மம் செய்கின்றனர். சிலர் பத்திரிகையில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக நன்கொடை தர்மங்களை கொடுத்து விடுகின்றார்கள். முஸ்லிம் பெயர் தாங்கிகளும் இஸ்லாத்தின் பெயரால் பல ரூபாய்களை வசூலித்து, எக்காரியத்திற்காக வாங்கப்பட்டதோ அக்காரியத்திற்கு கொஞ்சம் செலவு செய்து விட்டு பொய் கணக்கு எழுதி மீதம் தொகைகளை தங்கள் செலவுகளுக்கு பயன்படுத்தி தங்கள் வயிற்றை நிரப்பி வசதியுடையோராகி விடுகின்றனர்.
நல்லடியார்கள் அவுலியாக்கள் பெயரால் பலர் பணம் வசூல் செய்கின்றனர். அவ்லியாக்களை வணங்குவதையும், அவர்களின் உதவிகள் கேட்பதையும் இஸ்லாம் கண்டிக்கிறது. (பார்க்க இணைவைத்தல் பற்றி கூறும் வசனங்கள் 4:48, 5:72, 7:33, 22:31) ஆனால் வசூலிக்கும் பணம் மின் விளக்குகள் போடப்படுவதற்கும், கபுர்களை பூ மாலையால் அலங்கரிக்கப்படுவதற்கும், இசைக் கச்சேரி மற்றும் ஆடல் பாடல் போன்ற மார்க்க முரணான காரியங்களுக்கும் பணம் செலவு செய்யப்பட்டு வீண் விரயம் செய்கின்றனர்.
பள்ளிவாசல் புதிதாக கட்டுகிறோம் என்று வசூல் செய்யும் பணமும் வீண்விரயம் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு செய்யும் செலவும், பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு செய்யும் செலவும் ஒரு பள்ளி கட்டிவிடலாம். நம் சகோதரர்கள் வீடு குடிபோகும்போது விருந்து கொடுப்பது மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொண்டு நாம் பணத்தை வீண் விரயம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நம் முஸ்லிம்களில் பலரும் குழந்தை பிறந்தால் பெயர் சூட்டு விழா இன்னும் பெண்கள் பருவமடைந்து விட்டால் பூ போடும் விழா என்று இப்படி அநேக விஷயங்களில் பணத்தை வீண்விரயம் செய்கின்றனர். சிறுவர்களுக்கு கத்னா செய்து மாலை போடும் விழாவிலும், நாம் இறந்து விட்டாலும் நம் பெயரில் 3,5,7, 40 ம் பாத்திஹா ஓதி வீண்விரயம் செய்கின்றனர். ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர் இரண்டு மாதமும் மெளலூது என்ற பெயரில் நம் முஸ்லிம்கள் பணத்தை வீண் விரயம் செய்கின்றனர்.
எனவே சகோதரர்களே! நாம் சம்பாதிக்கும் பணம் இஸ்லாம் காட்டும் வழியில் செலவிடவும், வீண் விரயம் செய்யாமலிருக்கவும் அல்லாஹ் அருள் புரிவனாக! ஆமீன்.