வறுமைக்காக… பிச்சையெடுப்பதா?


இறையடிமை
வறுமையில் வாடுகின்ற மனிதன் கடைசியில் பிச்சையெடுத்து வாழ முற்படுகின்றான். பிச்சையெடுத்தல் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றது. அதைத் தடுக்க பல நாடுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும் பிச்சையெடுத்தலை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. பல்வேறு முறைகளில் பிச்சையெடுக்கப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள், கடைவீதிகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பிச்சையெடுத்தல் அதிகமாகக் காணப்படுகிறது. மத ரீதியாக ஆராய்ந்தால் ஒரு சில மதங்கள் பிச்சையெடுத்தலை ஆதரிக்கின்றன. “குருகுலக் கல்வி” முறை இருந்த காலத்தில் மாணவர்கள் தாங்கள் பயிலுகின்ற ஊரில் வீடுவீடாகச் சென்று அரிசி மற்றும் தானியங்களைப் பிச்சையெடுத்து, அதை உணவாக சமைத்து, தங்கள் ஆசிரியருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் அளித்த பிறகு தாங்களும் உண்டு வந்தார்கள். அதேபோன்று கடவுள் காரியங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் “உஞ்சவிருத்தி” என்று சொல்கின்ற ஏற்பாட்டின்படி பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தார்கள். அச்செயலை எவரும் தவறாகவோ, இழிவாகவோ கருதவில்லை. மாறாக இவ்வாறு வாழ்ந்தவர்கள் “மகான்கள், ஞானிகள்” என்று போதிக்கப்பட்டனர். துறவறம் மேற்கொண்டவர்கள் பிச்சையெடுத்துத்தான் வாழவேண்டும் என சமண முனிவர்கள் வற்புறுத்தப்பட்டனர். மேற்கண்டவர்கள் நலனுக்காக செல்வந்தர்கள் “அன்ன சத்திரம்” கட்டு சோறு போட்டார்கள். இன்றும் அத்தகைய சத்திரங்கள் செயல்பட்டு வருவதை பல ஊர்களில் காண முடியும். இத்தகைய அன்ன சத்திரங்களும் ஜாதி அடிப்படையில் செயல்பட்டு வருவதை இன்று கவனத்தில் கொள்ள வேண்டும். காசி நகரத்தில் பல்வேறு ஜாதி மக்களுக்காக சத்திரங்கள் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை இருந்து வருகின்றன.
பிச்சையெடுத்தே பெருஞ் செல்வந்தர்களானவர்கள் ஏராளம் தற்போது எல்லா மதத்தினரும் பிச்சையெடுக்கின்றனர். நேர்மையாக பிச்சையெடுப்பவர்களும் உண்டு. பிறரை ஏமாற்றி பொய் சொல்லி பிச்சையெடுப்பவர்களும் உண்டு. தனியாகவும், கூட்டாகவும் பிச்சையெடுக்கிறார்கள். வயது வித்தியாசமின்றி சிறு குழந்தையிலிருந்து பெரும் கிழவர்கள் வரை பிச்சையெடுக்கிறார்கள். இவர்களில் தனியாக பிச்சையெடுத்து வாழ்பவர்களும் உண்டு. குடும்பமாக பிச்சையெடுப்பவர்களும் உண்டு. அதாவது பிச்சைக்காரர்கள் வாலிப வயதடையும்போது திருமணம் செய்து, குழந்தைகளை பெற்றெடுத்து வாழ்கிறார்கள் என்பது புலனாகிறது. பிச்சையெடுத்தல் குடும்ப வாழ்க்கைக்குத் தடையாய் இல்லை என்பதுதான் உண்மை. பிச்சையெடுத்தலை அத்தியாவசியத்திற்காக மேற்கொள்பவர்களும் உண்டு. பரம்பரையாகச் செய்து வருபவர்களும் உண்டு. பிச்சைக்காரர்களில் உடல் வலுவுள்ளவர்களும், இயலாதவர்களும், நோயாளிகளும், உடல் ஊனமுற்றவர்களும், பெண்களும் இருக்கின்றனர்.
பிச்சை எடுக்கக் காரணங்கள்:
எந்த ஒரு நோயினையும் குணப்படுத்துவதற்கு முன்பு அதன் தன்மையை அறியவேண்டியது அவசியமாய் இருப்பது போல, சமூக, பொருளாதார நோயான வறுமை, அதன்பின் விளைவான பிச்சை எடுத்தலின் தன்மைகளை அறியவேண்டியது அவசியமாய் இருக்கின்றனது. பிச்சையெடுப்பவர்களின் மனநிலை, பொருளாதார நிலை, சமூக நிலை, சமுதாயம் பிச்சையெடுத்தலைப் பற்றி கொண்டிருக்கும் கருத்து, பிச்சையெடுத்தலைப் பற்றி அரசு கொண்டிருக்கும் கொள்கை, அரசின் உதவித் திட்டங்கள், மதங்கள் பிச்சையெடுத்தலைப் பற்றி கொண்டிருக்கும் கொள்கை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றபோதுதான் பிச்சையெடுத்தலை போக்க மேற்கொள்ளும் திட்டங்கள் முழுமையாகய் வெற்றிபெற முடியும்.
வறுமையின் காரணமாய்த்தான் எல்லாரும் பிச்சையெடுக்கிறார்கள் என்று கொள்ள முடியுமா? பிச்சையெடுப்பவர்களில் அநேகர் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களாக இருக்கிறார்களாம். பிறருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வாங்குபவர்களும் அவர்களில் உண்டு என்று அறியும்போது வறுமை மட்டும்தான் பிச்சையெடுக்க முழுமையான காரணமாய் இருக்க முடியாது.
உழைக்காமல், சிரமப்படாமல் பொருள் சேர்ப்பதற்கு பிச்சையெடுத்தல், ஒரு சாதனமாய் இருப்பதாகக் கருதுபவர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர். சோம்பித் திரிபவர்களுக்கு பிச்சையெடுத்தல் சுலபமாய் தெரிகிறது. நம்நாட்டில் பிச்சையெடுத்தலை ஒரு சமூக குற்றமாக கருதாமையும், பிச்சையெடுத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காமையும், அரசின் திட்டங்கள் பிச்சைக்காதர்களுக்கு கவர்ச்சியாய் இல்லாமையும், அரசின் நிதிநிலை பற்றாக்குறையும் பிச்சையெடுத்தல் வெகு விமரிசையாய் நடைபெறுவதற்கு காரணங்களாக இருக்கின்றன இருந்தபோதிலும் வறுமைதான் பெரும்பாலோர் இத்தொழிலுக்கு வருவதற்கு காரணமாய் இருக்கின்றது.
வயதானவர்கள் பலர் தங்கள் பிள்ளைகள், சுற்றத்தார்கள் உதவி செய்ய மறுக்கும்போது அல்லது உதவி செய்ய இயலாதபோது பிச்சையெடுத்தல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கடவுள் பிரார்த்தனை என்ற பெயரால் வசதியுள்ளவர்கள் கூட பிச்சையெடுக்கிறார்கள்.
பிச்சையெடுத்தலின் தீமைகள்:
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், “மேலிருக்கும் கை கீழே இருக்கும் கையை விடச் சிறந்தது. (ஏனெனில்) மேலே இருக்கும் கை கொடுக்கும் கை, கீழே இருக்கும் கை கேட்கும் கை” (கேட்பதை விட கொடுப்பது சிறந்தது) (புகாரீ)
நபி(ஸல்) மேலும் கூறுகிறார்கள், “பிச்சையெடுத்தலில் உள்ள அவமானத்தை ஒருவர் உணர்ந்தால் அவர் மீண்டும் பிச்சையெடுக்க துணியமாட்டார்”. பிச்சையளிப்பவர் பேசும் ஏளன வார்த்தைகள், மரியாதையின்மை, கேவலம் ஆகிய எல்லாவற்றையும் பிச்சையெடுப்பவர் பொறுத்துக் கொள்ள வேண்டும். பிச்சையளிப்பவன் முன் பிச்சை யெடுப்பவன் தாழ்ந்தவனாகின்றான். அதிலும் குறிப்பாக பெண்கள் பிச்சையெடுக்க முனைகின்றபோது “பெண்மை” கேலிப் பொருளாகி விடுகின்றது. மேலும் பிச்சையெடுப்பவர் இளம் பெண்ணாக இருந்தால் அவள் கற்பு விலை போய்விடும்.
சமுதாயக் கேவலம்:
மனித சமுதாயத்தில் ஒரு பிரிவினர் பிறிதொரு பிரிவினரிடம் கையேந்தி நிற்பது சமுதாய அவமானமாகக் கருதப்படுகின்றது. சமுதாயத்தை ஒரு மனித உருவமாகக் கருதினால், அதன் கால்கள் அழுகி பயனற்றதாக இருக்கும்போது, எவ்வாறு அந்த உடல் நிற்க முடியாமல் ஆகிவிடுகிறதோ, அதே போன்று பிச்சைக்காரர்கள் இருக்கின்ற சமுதாயம் புறையோடிப்போன சமுதாயமாகத்தான் இருக்கும். பிறப்பினால், உருவத்தினால், பண்பினால் மனிதகுலம் ஒன்றாக இருக்கும்போது, பிச்சையெடுப்பதன் மூலம் அவர்கள் பிற மனிதர்களை விடத் தாழ்ந்தவர்களாக மாறி விடுகிறார்கள். மேலும் சமுதாய மேம்பாட்டிற்கு எத்தகைய உதவியும் பிச்சைக்காரர்கள் செய்வதில்லை. இறைவன் கொடுத்திருக்கின்ற “மனித வளத்தை” விரயம் செய்வதோடு மற்றவர்களின் உழைப்பின் விளைச்சலை உறிஞ்சி ஒட்டுண்ணியாகத் திகழ்கிறார்கள். மாறாக உடல் வலுப்பெற்றிருப்பவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு உழைக்க முற்படும்போது பிச்சையெடுத்தலில் உள்ள கேவலத்தைத் தவிர்த்து, தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாழ்வதோடு மட்டுமல்லாமல் சமுதாய, செல்வ மேம்பாட்டிற்கும் தங்கள் பங்கினை செலுத்துகிறார்கள். உடல் ஊனமுற்றவர்கள் கூட சமுதாய செல்வ மேம்பாட்டிற்கு உழைத்திட முடியும் என்பதை தற்போது நிரூபித்து வருகிறார்கள். பெரும் தீராத வியாதியுள்ளவர்கள் மற்றும் வயோதிகர்களால் உழைக்க முடியாது என்பது உண்மை. ஆனால் அத்தகையவர்கள் பிச்சை எடுத்துதான் வாழ வேண்டும் என்பது விதியல்ல. இயலாதவர்கள் பிச்சையெடுத்து வாழவேண்டும் என்ற நிலை இருந்தால் அது அந்த சமுதாயத்தின் மிகக் கேவலமான, நாகரீகமில்லாத, அக்கறையில்லாத அவலத்தை எடுத்துக் காட்டுகிறது.
இறை நம்பிக்கையைப் போக்குதல்”
எவர் அல்லாஹ்வை முற்றிலும் நம்பவில்லையோ அவர் பிற மனிதர்களிடம் சென்று யாசகம் புரிகிறார். ஆனால் அல்லாஹ் கூறுகின்றான், “எவர் அல்லாஹ்வை(முற்றிலும்) நம்புகின்றாரோ, அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்”, (55:3) எவர் பிச்சையெடுப்பதில் இருந்து விலகிவிடுகிறாரோ, நிச்சயமாக அவரை அல்லாஹ் பிறமனிதர்களின் தயவில் இருந்து காப்பாற்றுகிறான். பிறர் தயவின்றி சுதந்திரமாக வாழ்வதாக எவர் கருதுகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக சார்ந்து(தவக்கல்) இழுக்கிறார். அத்தகையவரை அல்லாஹ்வும் பிறர் தயவின்றி வாழ வைக்கின்றான். அவருக்கு மனநிறைவை அளிக்கின்றான். எவர் பொறுமையுடன் இருக்கின்றாரோ அவருக்கும் அல்லாஹ் பொறுமையுடன் வாழக்கூடிய தேவை நிவர்த்தியை அளிக்கின்றான்.
“பசியின் வாட்டத்தினால் பிற மனிதர்களிடம் இரந்து இருப்பவருக்கு அவரது பசி போக்கப்படமாட்டாது. மாறாக எவர் அல்லாஹ்விடம் உதவி தேடுகிறாரோ அவருக்கு விரைவாக மரணத்தை கொண்டு அல்லது விரைவான செல்வத்தைக் கொண்டு அவரைத் தேவைகளற்றவனாக்கி விடுகின்றான்”. (அபூதாவூது, திர்மிதீ)
இறைப் பெயரை உச்சரித்தும், இறை வசனத்தை மொழிந்து பிச்சையெடுப்பவர்கள் இறை விசுவாசம் கொண்டவர்களாகக் கருதப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இறை விசுவாசத்தை, இறை நம்பிக்கையை மனதில் இருந்து போக்கிவிட்டு பிறமனிர்களிடம் அவர்கள் கையேந்துகிறார்கள். வறுமை மற்றும் பசி ஒரு தற்கால சோதனை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
(எத்தகைய கஷ்டத்திலும்)நீங்கள் பொறுமையைக் கைகொண்டும், தொழுதும்,(இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால் நிச்சயமாக இது உள்ளச்சமுடையோருக்கேயன்றி(மற்றோருக்கு)மிகக் கடினமாகவேயிருக்கும்”. (2:45)
(பயம் பசி போன்ற சோதனைக்கு உள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய கஷ்டம் ஏற்பட்ட போதிலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடம் மீளுவோம்” எனக் கூறுவார்கள்.
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் ஆசீர்வாதங்களும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும் இவர்கள் தாம் நேரான வழியை அடைந்தவர்கள். (2:156,157)

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item