சரித்திர நாயகனின் சரித்திரம்
http://sukrymuhajiree.blogspot.com/2016/04/blog-post_19.html
நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் (ஸல்). யானையாண்டு - ஆமுல்பீல் ரபீஉல் அவ்வல் பிறை 12, பி.பி. 571-ம் வருடம் ஏப்ரல் மாதம் 20-ம் தேதி புனித மக்காவில் பிறந்தார்கள். அவர் இவ்வுலகத்தில் 63 ஆண்டுகள் வாழ்ந்தார். 63-ம் வயதில் புனித மதீனாவில் இவ்வுலகத்தை விட்டு மறைந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். ஹிஜ்ரி 10-ம் ஆண்டில் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 திங்கட்கிழமை (கி.பி. 634, ஜூன் மாதம் 8-ம் தேதி) அன்று மறைந்தார்கள். ஆதிபிதா நபி ஆதம் (அலை) அவர்களின் 51-ம் தலைமுறையில் குரைஷி வர்க்கத்தில் பிறந்தவர் நாயகம் (ஸல்). ஹல்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரபில் பிறந்தார்கள். தந்தை வழி, முஹம்மது இப்னு அப்துல்லாஹ், இப்னு அப்துல் முத்தலிப், இப்னு ஹாஷிம், இப்னு அப்துல் முனாப், முஹம்மது இப்னு ஆமினா பிந்த் வஹப், இப்னு அப்துல் முனாப், இப்னு ஸஹ்ரா, இப்னு கிலாப். நபி பெருமான் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே தந்தை அப்துல்லாஹ் காலஞ் சென்று விட்டார். நபி (ஸல்) அவர்களின் இளம் வயதிலேயே அன்னை ஆமினா காலஞ் சென்றுவிட்டார். தாய். தந்தையை இழந்த அனாதைக் குழந்தையான முஹம்மத் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சிறிது காலம் அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் காலஞ் சென்ற பிறகு சிறிய தந்தையாகிய ஆபூதாலிப் அவர்களால் வளர்க்கப் பெற்றார். இவ்வாறு தாய், தந்தையரை இளம் பிராயத்திலேயே இழந்த நபி (ஸல்) பெருமானார், அவர்களுக்கு ஸஃது குலத்தைச் சேர்ந்த நாயகி ஹலிமா என்னும் செவிலித் தாய் பாலூட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். மனிதர்களிடம் அவர் ஒருவித கல்வியறிவும் கற்கவில்லை. எனவேதான், அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபி என்ற ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. ஆனால், அவர் தெய்வீகக் கல்வி அறிவு பெற்றிருந்தார். உண்மை, ஒழுக்கம். மரியாதை, பக்தி, கண்ணியம், நம்பிக்கை, இரக்கம், பொறுமை, நேர்மை, விசுவாசம், கற்பு, வாக்குறுதி முதலிய இம்மை மறுமையில் நற்பயன் விளைவிக்கக் கூடிய நற்குணங்கள் அனைத்தும் பெருமானாரிடம் இருந்தன. நபித்துவம் பெற்று அதை வெளியிடுவதற்கு முன் மக்காவாசிகள் நபி பெருமானார் அவர்களுக்கு மிக்க மரியாதை செலுத்தி வந்தார்கள். மேலும் அவர்களின் நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் மரியாதையும், மதிப்பும் வைத்து அவர்களுக்கு அல் அமீன், நம்பிக்கைக்குரியவர் அபயமளிப்பவர் என்ற சிறப்புப் பெயர்கள் சூட்டி அழைத்தார்கள். மக்காவிற்குச் சமீபத்திலுள்ள ஹிரா மலைக் குகையில் அல்லாஹ்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தியானித்துக் கொண்டிருக்கும் போது ஹல்ரத் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலம் முதன் முதலாக வஹீ (தெய்வத் தூது) அறிவிக்கப்பட்டது. அச்சமயம் அவர்களுக்கு 40 வயதாகும். முதன் முதலாக அருளப் பெற்ற திருக் குர் ஆனின் வேத வசனம் இக்ரஃ (ஓதுவீராக!) என்ற வசனமாகும். நபிப் பட்டம் கிடைத்ததும் மக்கமா நகரிலுள்ளவர்களிடம் இஸ்லாத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொன்ன சமயம் அங்குள்ள மக்கள் அவர்களுக்கு பல வகையான சொல்ல முடியாதளவு கஷ்டங்களையும் தொல்லைகளையும் கொடுத்தார்கள். ஆனால் பல சிரமங்களுக்கிடையில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டும் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அல்லாஹ்வின் உத்திரவுப்படி நாயகம் (ஸல்) மக்காவிலிருந்து மதீனா சென்றடைந்து அங்குள்ள மக்களின் ஒத்துழைப்பின் பேரில் மதீனாவில் வெகுவிரைவில் இஸ்லாம் பரவியது. நபிப் பட்டம் கிடைத்து 13-ம் ஆண்டு மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்ற நிகழ்ச்சிக்கு ஹிஜ்ரா என்று சொல்லப்படும்.