குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (4)
http://sukrymuhajiree.blogspot.com/2016/04/4.html
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (4)
"ஆயத்தும் முத்தஷாபிஹாத்"
"ஆயாத்தும் முத்தஷாபிஹாத்" வசனங்கள் பற்றி அல்குர்ஆன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.
அவன் தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (ஒரே பொருலுள்ள) வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இந்நெறிநூலின் அடிப்படையாகும். மேலும், எஞ்சியவை பல பொருள் பெறத்தக்கவை (தீர்க்க மற்வை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள், குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களில் முடிவுகளைத் தேடி, (ஒரே பொருளாக்கி) அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் இவற்றின் உண்மைக் கருத்துகளை (முடிவு- Final verdict) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார், அறிவில் தேர்ந்தவர்களோ நாங்கள் இவற்றில் (பூரணமாக) நம்பிக்கை கொண்டோம். இவை அனைத்துமே எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தவை நாம்" என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் 3:7)
இந்த 3:7 வசனத்திலிருந்து "முத்தஷாபிஹாத்" வசனங்களின் முடிவான உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான், வேறெவரும் அறிய முடியாது என்று தெளிவாக அறிய முடிகின்றது.
அல்குர்ஆனின் பல வசனங்களைத் தங்கள் இஷ்டத்திற்குப் புரட்டியுள்ள காதியானிகள் இந்த 3:7 வசனத்தையும் புரட்டி இருக்கிறார்கள். காதியானிகளின் மொழிப்பெயர்ப்புகளில் முத்தஷாபிஹாத் வசனங்களின் முடிவான உண்மைப் பொருளை அல்லாஹ்வும் அறிவான். கல்வியறிவில் நிலையானவர்களும் அறிவார்கள்" என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
கல்வியறிவில் சிறந்தவர்களோ, இதனையும் நாங்கள் விசுவாசித்தோம் (முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத்) யாவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தாம்" என்று கூறுவார்கள் என்ற வசனத்திலுள்ள கல்வியறிவில் நிலையானவர்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்ற வசனத்தோடு இணைத்து அல்லாஹ்வும் அறிவான், கல்வியறிவில் நிலையானவர்களும் அறிவார்கள் என்று தவறாக மொழிப்பெயர்த்து வைத்திருக்கிறார்கள். காரணம் இந்தத் தவறான விளக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் மிர்சா குலாமின் தவறான விளக்கங்களை நியாயப்படுத்த முடியும். இந்தக் காதியானிகளுக்கு வழிவகுத்துக் கொடுத்ததே இந்த முகல்லிது முல்லாக்கள்தான். முகல்லிது முல்லாக்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் குர்ஆன் வசனங்களுக்கு "தப்ஸீர்" என்ற பெயரில் அவர்கள் மனதில் வந்ததையயல்லாம் எழுதி வைக்கப்போய், அதே பாணியை இந்தக் காதியானிகளும் பின்பற்றி வழிகெட்டுச் செல்கிறார்கள். கேட்டால் முன்னோர்கள் செய்துள்ள மொழிப்பெயர்ப்பு, தப்ஸீர் அடிப்படையிலேயே செய்திருக்கிறோம் என்று சொல்லி சில தப்ஸீர்களின் பெயர்களைக் கொடுத்து நியாயப்படுத்துவார்கள்.
3:7 வசனத்தை நடுநிலையோடு வாசிப்பவர் எவரும், அந்த வசனத்தின் முழு சாராம்சத்தையும் இணைத்துப் பார்க்கும்போது முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருள்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பதையும், மனதில் மாறுபாடு இருப்பவர்களே அவர்கள் இஷ்டத்திற்கு விளக்கங்கள் கொடுத்து அதைப்பின்பற்றுவார்கள் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை கல்வியறிவில் நிலையானவர்களும் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இவர்கள் சொல்லும் விநோதமான காரணம், மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியாததை அல்லாஹ் ஏன் இறக்கிவைக்க வேண்டும்? அவை குர்ஆனில் பதிவாகி மக்கள் ஏன் ஓதவேண்டும்? சிந்திக்க வேண்டாமா? என்ற கருத்துப்பட வரும் வசனங்கள் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு பொருந்தாதா? எனவே முத்தஷாபிஹாத் வசனங்களின் முடிவான உண்மைப் பொருள்களை எவரும் விளங்க முடியாவிட்டாலும் கல்வியறிவில் நிலையானவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று வாதிடுகிறார்கள்.
இந்த வாதத்தை மேல் எழுந்தவாரியாகப் பார்ப்பவர்கள் இதில் நியாயம் இருப்பதாகவே எண்ணுவார்கள். சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் உண்மைப் புலப்படும். அல்குர்ஆன் தெள்ளத் தெளிவானது. 3:7 வசனத்தை மீண்டும் நிதானமாக வாசித்துப் பாருங்கள். "முடிவைத் தேடிப் பின்பற்றுவார்கள்" என்ற பகுதியை ஆழ்ந்து நோக்குங்கள். முத்தஷாபிஹாத் வசனங்களை ஓதுவதையோ, அவற்றைப் பற்றி சிந்திப்பதையோ, விளங்க முற்படுவதையோ தடை செய்யப்படவில்லை. இதுதான் அதன் பொருள் என்று ஓர் உறுதியான முடிவுக்கு வந்து அதை பின்பற்றுவதையே தடை செய்யப்பட்டுள்ளது.
இப்போது பின்பற்ற முடியாத ஒன்றைப் பற்றி ஏன் சிந்திக்கவேண்டும்? விளங்கிக் கொள்ள முற்பட வேண்டும்? என்ற ஐயத்தைக் கிளப்பலாம். அதற்கு 3:7 வசனமே விடை பகர்கின்றது. கல்வியறிவில் உறுதிப்பாடுடையவர்களோ நாங்கள் பூரணமாக அதில் நம்பிக்கை கொள்கிறோம் அவை(முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத்) முழுவதுமே எங்கள் ரப்பிடமிருந்து வந்தவைதான்" என்று கூறுவர். அதாவது மனிதனது அறிவு சரிகாணும் எந்தக் காரியமாக இருந்தாலும், அதனை மனிதன் ஏற்றுக் கொள்ளத் தயங்கவே மாட்டான். மனித அறிவு சரிகாணாத விஷயங்களை ஜீரணிப்பது தான் மனிதனைப் பொறுத்தமட்டிலும் மிகவும் சிரமமான காரியமாகும். நாஸ்திகர்கள் இறைவனையும், மறுமையையும் மறுப்பதற்கு இதுவே மூலகாரணமாக இருக்கிறது.
மனித அறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கும் விஷயங்களையும் அவனது தரப்பிடமிருந்து வந்ததுதான், அவனது கட்டளைதான் என்று உறுதியாகத் தெரியும் போது, எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வது தான் அவனது உன்னத நிலையாகும். இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜிலே நிறைவேற்றப்படும் பல காரியங்கள் (ஷைத்தானுக்கு கல் எறிதல், தொங்கோட்டம் ஓடுதல்) மனிதனது அறிவுக்குப் பொருத்தமானதாகத் தெரிவதில்லை. அர்த்தமற்ற செயல்களாகவே தெரியும். ஆயினும் அறிவுடையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை அவனது தூதர் செய்து காட்டி இருக்கிறார்கள். நமது அறிவுக்கு எட்டாவிடினும், இறுதித் தூதர் செய்து காட்டியதுதான் என்று ஆதாரபூர்வமாக அறியும் போது, நாமும் நிறைவேற்றுவதுதான் நமது கடமை. அதுதான், "நாம் அடிமை; அல்லாஹ் நமது எஜமான்; எஜமானின் கட்டளைகளை நமக்குச் சரியாகத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் நாம் அதை நிறைவேற்றுவதே நமது கடமை" என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
இதை நபிஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற இரு நிகழ்ச்சிகள் நமக்குத் தெள்ளத் தெளிவாக ஊர்ஜிதம் செய்கின்றன.
"இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது நீ எவ்வாறு சாந்தியையும், அபிவிருத்தியையும் பொழிந்தாயோ, அதேபோல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சாந்தியையும், அபிவிருத்தியையும் பொழிவாயாக" என்று ஒவ்வொரு தொழுகையிலும், சலவாத்திலும், துஆவிலும் முஸ்லிம்கள் ஏற்றிப் போற்றும் ஓர் உன்னத பதவியை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெற்றுள்ளனர். இறைவனது கட்டளை தான் என்று அறிந்தவுடன், அதன் பின்விளைவைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், இறைவனது கட்டளையை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முற்பட்டபோது அவர்களுக்கு இவ்வளவு பெரிய பதவியைப் பெற்றுத்தந்தது
தள்ளாத முதுமை வரை குழந்தை இல்லாமல் சோதிக்கப்பட்ட பின் (குழந்தை இல்லையே என்று ஏங்கி எந்தத் தர்காவுக்கும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் காவடி தூக்கவில்லை) விருத்தாப்பிய வயதில் அருமையாகப் பெற்றெடுத்த அருமை மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அருமை மகனைப் பெற்றுக் கொடுத்த அருமை மனைவி ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் மனித சஞ்சாரமே அற்ற, சொட்டுத் தண்ணீர் கிடைக்காத கடும் பாலைவனத்தில், அல்லாஹ்வின் கட்டளைப்படி விட்டுச் செல்கிறார்கள் என்றால், எந்த மனித அறிவும் சரிகாணுமா இதை? மனைவியையும் மகனையும் பசியாலும், தாகத்தாலும் துடித்துச் சாகடிக்கவே இந்த ஏற்பாடு என்றே மனித அறிவு சொல்லும். ஆனால் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ இது தன்னையும், தன் மனைவியையும், மகனையும் படைத்த எஜமானாகிய அல்லாஹ்வின் கட்டளை: எஜமானின் கட்டளையை அடிமை மீற முடியாது. நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து அல்லாஹ்வின் கட்டளையை செய்து முடிக்கிறார்கள். அல்லாஹ்வும் அவ்விருவரையும் வெகு அற்புதமாகக் காப்பாற்றி வளர்த்தது மட்டுமல்லாமல் மனித சஞ்சாரமே அற்ற அந்தப் பாலைவனத்தை ஒரு பெரும் நகரமாக மாற்றி அமைத்து விட்டான்; உலகில் எந்த மூலை முடுக்கில் உற்பத்தியாகக் கூடிய உணவு வகையாக இருந்தாலும் அவற்றின் புத்தம் புதிய நிலை மாறாமல் இன்று அங்கு கிடைப்பது ஆச்சரியம் இல்லையா?
இந்தக் கடுமையான சோதனையில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெற்றி பெற்றபின் சிறிது காலம் கழித்து இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துள்ளித்திரியும் பருவத்தில் தனது செல்வ மகனை தன் கையாலேயே அறுத்துப் பலியிடுவதாக கனவு காண்கிறார்கள். நபிமார்களின் கனவு உண்மைச் செய்தியாகும். எனவே இறைவனின் இக்கட்டளையையும் நிறைவேற்றத் துணிகிறார்கள் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தன்னை அறுத்துப் பலியிடுவதற்கு பூரண ஒப்புதலைத் தருகிறார்கள், தனய இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம். இதை மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளுமா? பெற்ற தந்தையே தனது கையாலேயே மகனை அறுத்துப் பலியிடுவது, அதுவும் பல்லாண்டுகள் குழந்தையில்லாமல் ஏங்கிக்கிடந்து பெற்ற மகன், அந்த மகனை பலியிடுவதால் அல்லாஹ்வுக்கு என்ன லாபம்? என்று தான் மனித அறிவு சொல்லும். இதைவிடக் காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல் இருக்க முடியாது என்றே உலகம் தீர்ப்புக் கூறும்.
இன்று இப்படிப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யமாட்டான். செய்யவும் முடியாது. (காரணம் யாருக்கும் வஹி வருவதில்லை) ஆனால் அன்று இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்யத் துணிந்தார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் இது படைத்த எஜமானின் கட்டளை, எஜமானன் கட்டளையை அடிமை மீற முடியாது. எனவே பின்விளைவு மிக பயங்கரமாகத் தெரிந்தாலும், இறைவனது கட்டளையை தனக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பற்றி சிந்திக்காது நிறைவேற்றத் துணிந்தார்கள். இறைவனும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது கட்டளைக்கு எந்த அளவு அடிபணிகிறார்கள் என்று உலகிற்குக் காட்டவே இந்த சோக நிகழ்ச்சியை செய்யும்படி கட்டளையிட்டான். அவர்கள் இறைவனது கட்டளைக்கு அடிபணிந்து அதை நிறைவேற்றத் தயாராகிவிட்டார்கள் என்று நிரூபமணமான பின், மகனுக்குப் பகரமாக ஆட்டை அறுத்துப் பலியிடச் செய்து இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் காப்பாற்றியதோடு இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உன்னத நிலையையும் உலகம் அறியச் செய்தான்.
இன்று மனிதர்களில் சிலர் தங்களின் மனித எஜமானர்களை திருப்திப்படுத்த, எவ்வித சிந்தனையுமில்லாமல் எவ்வளவு கொடூரமான செயல்களையும், அவர்களின் உத்திரவுப்படி செய்து முடிப்பதை பார்க்கும் நாம், எஜமானர்களுக்கெல்லாம் பெரிய எஜமானனான அல்லாஹ்வின் கட்டளைகள் நமக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ஏற்றுக் கொள்வது நமது கட்டாயக் கடமையே என்பதை அறிவுடையவர்கள் மறுக்கமாட்டார்கள். இதையே அல்குர்ஆனின் ஆரம்பத்திலேயே (2:3) மறைவான விஷயங்களை – அதாவது அறிவுக்கு எட்டாத விஷயங்களை நம்பி ஏற்றுக்கொள்வார்கள் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.
இந்த விஷயத்தில் எந்த அளவு உண்மையாளர்களாக இருக்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காக முத்தஷாபிஹாத் ஆயத்துக்களை அல்லாஹ் இறக்கி இருக்கிறான் என்று சொன்னால் அறிவுடையவர்கள் அதை மறுக்க எந்த முகாந்திரமுமில்லை. இதையே 3:7-ன் ஒருபகுதி சுட்டிக்காட்டுகிறது. அடுத்து முத்தஷாபிஹாத் ஆயத்துகள் இறக்கப்பட்டதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்லலாம். அதாவது வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய இவ்வுலகம் சம்பந்தமான உண்மைகளை அன்றே தெளிவாகச் சொல்லப்பட்டிருந்ததால் மனிதர்கள் அதனை ஜீரணித்திருக்கமாட்டார்கள். 16ம் நூற்றாண்டில் உலகம் உருண்டை என்று அறிவித்த கலீலியோ கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார் என்றால் 7ம் நூற்றாண்டில், மக்களின் மனோ நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த விபரங்களை அடுத்துப் பார்ப்போம்.
விஞ்ஞான உண்மைகள்:
விஞ்ஞான உண்மைகள் என்று சொல்லும்போது 1400 வருடங்களுக்கு முன் அவை திட்டமாக, தெளிவாக மக்கள் முன் வைக்கப்படுவது சாத்தியமில்லை. அன்றைய மக்கள், அவற்றை ஜீரணித்திருக்க மாட்டார்கள். இது விஷயமாக சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய பிரபல மருத்துவ நிபுணர், ஆராய்ச்சியாளர் டாக்டர் மாரிஸ்புகைல் என்ற பிரெஞ்ச் அறிஞர் தனது விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
இன்று கண்டுபிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளுக்குக் கொஞ்சம்கூட பழுது வராத வகையில் குர்ஆனில் பதப்பிரயோகங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவே அதுதான் இந்த நெறிநூலின் தனிச்சிறப்பாகும். இந்த உண்மைகளை அந்தக் காலத்திலேயே அப்பட்டமாக அம்மக்களுக்கு அறிவித்திருந்தால் அவற்றை அவர்கள் விளங்கி இருக்கமாட்டார்களல்லவா? அந்தக் காலத்தில் அவர்களது அறிவுக்கு அப்பாற்பட்டவிஷயங்களை, கூறியிருந்தால், அம்மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கும். இஸ்லாத்தினுடைய எதிரிகளும் இச்சந்தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். எனவேதான் சூசகமான பதப்பிரயோகங்களைப் (முத்தஷாபிஹாத்) போட்டு, அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல, இந்தக் காலத்திற்கும், ஏன் எதிர்காலத்திலும் கூடத்தான், பொருந்தக்கூடியதாக அல்குர்ஆன் அமைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய அற்புதம்தான்.
இந்த பிரெஞ்சு அறிஞரின் கூற்று அறிவாளிகளாலும் திட்டமான பொருள் அறிந்து கொள்ள முடியாது என்றால் முத்தஷாபிஹாத் வசனங்கள் ஏன் இறக்கப்பட்டுள்ளன? என்ற கேள்விக்கு நியாயமான விடையாக இருக்கிறது என்பதை நம்பிக்கையாளர்கள் மறுக்க முடியாது. அதே சமயம் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு காலத்துக்கு ஏற்றவாறு விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளப்பட்டாலும், அவற்றிலுள்ள பதப்பிரயோகங்கள் அதற்கு இடம் கொடுத்தாலும், அதன் காரணமாக திட்டமான தெளிவான மார்க்க அனுஷ்டானங்களில் எவ்வித பாதிப்பையும், மாற்றத்தையும் அவை ஏற்படுத்த முடியாது என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
கி.பி. 1600 வரை வாழ்ந்த மக்கள் இந்த உலகம் தட்டையானது. சூரியன் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையிலேயே இருந்தனர். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களிடையேதான் முதன்முதலில் பூமி உருண்டையா? தட்டையா? என்ற சர்ச்சை பிறந்தது. கோப்பர்னிகஸ் என்ற விஞ்ஞானி சூரியன், பூமி மற்றும் கோளங்கள் பற்றி ஆய்ந்தறிந்த உண்மைகளை மக்களிடம் சொல்ல அஞ்சிக் கொண்டிருந்தனர். அவரின் மறைவிற்குப் பிறகே அவருடைய நூல் வெளியாயிற்று. கலீலியோ அந்த உண்மைகளைச் சொன்னதால் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளானார் என்று வரலாறு கூறுகின்றது. இவை எல்லாம் கி.பி.15ம், 16ம் நூற்றாண்டுகளில் நடந்த சம்பவங்கள், ஆனால் இந்த உண்மைகளை அதற்கும் 9 நூற்றாண்டுகளுக்கு முன்பே கி.பி.7ம் நூற்றாண்டிலேயே அதி அற்புதமாக அன்றைய மக்களும் மறுப்புச் சொல்லாத நிலையிலும், இன்றைய மக்களும் குர்ஆனின் கூற்றை ஒப்புக் கொள்ளும் நிலையிலும் அதற்கேற்ற பதப்பிரயோகங்களை அல்குர்ஆன் பயன்படுத்தி இருக்கிறதென்றால், இது தனி மனிதரொருவரின் சாதனையோ, அல்லது மனித வர்க்கமே சேர்ந்து சாதித்த ஒரு சாதனையோ இல்லை.
அல்குர்ஆன் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் நெறி நூல் வெளிப்பாடுதான் என்ற விஞ்ஞானிகளும் வியந்து ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியுமா? எனவே, அல்குர்ஆன் அல்லாஹ்வின் புறம் இருந்து வந்த இறுதி நெறிநூலே என்பதற்கு முத்தஷாபிஹாத் வசனங்கள் தக்க சான்றுகளாகத் திகழ்கின்றன என்றும் சொல்லலாம்.
உதாரணமாக, "இரு கீழ்த்திசைகளுக்கும் இறைவன் அவனே! இருமேல் திசைகளுக்கும் இறைவன் அவனே!" என்று அல்குர்ஆனின் 55ம் அத்தியாயத்தில் 17ம் வசனம் கூறுகிறது. இது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட ஒரு வசனம். இந்த வசனத்தின் பொருளை அன்றைய மக்கள் அன்றைக்கிருந்த சூழ்நிலைக்கேற்றவாறு பொருள் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றோ, சூரியன் ஒரு ஆண்டுக்குள்ளாக, பூமத்தியரேகைக்கு வடக்கே 23 டிகிரியும், பூமத்திய ரேகைக்குதெற்கே 23 டிகிரியும் சஞ்சரித்து வருகின்றது. ஒரு சமயம் சூரியன் கிழக்கில் ஒருபுள்ளியில் இருந்து உதயமாகும். கொஞ்சநாள் கழித்து, சூரியன் சற்று வடக்கு தள்ளி உதயமாகும். அதேபோல் தெற்கிலும் கொஞ்ச காலம் தோன்றும். கிழக்கில் பல புள்ளிகளிலிருந்து உதயமாவதையும், மேற்கில் பல புள்ளிகளில் அஸ்தமனமாவதையும் தான் இரு கிழக்குகள், இரு மேற்குகள் என குர்ஆன் கூறுகிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை பிரெஞ்சு அறிஞர் டாக்டர் மாரிஸ்புகைல் எடுத்து எழுதுகிறார்.
இதைவிட சிறந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கலாம். பூமி உருண்டையானது. அது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் ஒரு முறை சுற்றிக்கொண்டு. 365 ட நாட்களுக்கொரு முறை சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை இப்போது மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள். பூமி உருண்டையாக இருக்கிறது. தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் இருக்கிறது. எனவே பூமியின் ஒரு பாதி பகலாக இருக்கும்போது மற்ற பாதி இரவாக இருக்கிறது. அதாவது ஒரு பாதிக்கு உதயம் என்றால், அது மற்ற பாதிக்கு அஸ்தமம். இதுபோல் முன்னைய பகுதிக்கு அஸ்தமம் என்றால் பின்னைய பகுதிக்கு உதயம். 2 உதயம் 2கிழக்கு, 2 அஸ்தமம் 2 மேற்கு அல்குர்ஆனின் கூற்று மிகத் தெளிவாக இருக்கிறது. எனவே இந்த 55:17 வசனம் சூசகமாக பூமி உருண்டை என்பதையும், அது சுழன்று கொண்டிருக்கிறது என்பதையும் அறிவிக்கின்றது.
ஆனால் அன்று பூமி தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த மக்களின் மார்க்க அனுஷ்டானங்களிலும், இன்று பூமி உருண்டை, சுழன்று கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டிருக்கிற மக்களின் மார்க்க அநுஷ்டானங்களிலும் அதாவது ஆயாத்தும் முஹ்க்கமாத்தின்படி செயல்படுவதில் வித்தியாசம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் முத்தஷாபிஹாத்தின் விளக்கங்கள் மார்க்க அநுஷ்டானங்களில் மாறுதலைக் கொண்டு வரமுடியாது. அதேபோல் இந்த 55:17 வசனத்திற்கு விஞ்ஞான அடிப்படையில் இன்று சொல்லப்படும் பொருள்தான் சரி என்று எவராலும் சொல்லவும் முடியாது. இன்னும் மேலதிக விஞ்ஞான கண்டுபிடிப்பின் மூலம் நாளை வேறு கருத்துக்களும் பெறப்படலாம்.
இதுபோல், இன்னொரு வகை கடந்த சுமார் 1400 வருடங்களாக அல்குர்ஆன் 96:2 வசனத்திற்கு "அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்" என்றே எல்லா மொழிகளிலும் பொருள் கொள்ளப்பட்டு வந்தது. "அலக்" என்ற அரபி பதத்திற்கு இரத்தக்கட்டி என்ற பொருளும் உண்டு. எனவே அன்றிருந்த மக்களின் மனோ நிலையில், தாயின் கர்ப்பப்பையில் எப்படிக் குழந்தை உருவாகிறது என்பதை அறியாத நிலையில் அன்று அவர்களுக்கிருந்த அறிவின்படி மனிதனோடு நெருங்கிய தொடர்புடைய "இரத்தக் கட்டி" என்ற பொருளே அதற்கு நெருக்கமானது என்று எண்ணினர்.
அந்தக் கருத்துப்படியே இதர மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. "அலக்" என்ற அரபி பதத்திற்கு அன்றும் ஒட்டி தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று" (அட்டையைப்போல்) என்ற பொருளும் இருக்கத்தான் செய்தது. ("ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒன்று" என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். முன்னைய பொருளே பின்னைய பொருளைவிட நெருக்கமானது) ஆனால் அன்றைய மக்கள் "அலக்" என்ற பதத்திற்கு மனிதனோடு நெருங்கிய பொருளாக இதைக் கொள்ள முடியவில்லை.
கருவின் நிலையை முதன்முதலில் புரிந்து கொண்டதே 1651ல் தான். அதற்கு முன் அதுபற்றி பலவிதமான மூட நம்பிக்கைகளில்தான் இந்த உலகம் இருந்தது. இன்றோ மனிதன், கருத்தரித்ததிலிருந்து குழந்தை பிறக்கும் வரை உள்ள நிலைகள் அனைத்தையும் தெளிவாக அறிந்த நிலையில் இருக்கிறான். அதில் எந்த நிலையிலும் இரத்தக் கட்டி என்ற நிலையை அடைவதே இல்லை. எனவே அலக் என்ற பதத்திற்கு இந்தப் பொருள் பொருத்தமில்லை.
மேலே விளக்கிய பொருளே பொருத்தமானது என்பது தெளிவாகின்றது. ஆனால் அன்று அலக் -இரத்தக்கட்டி என்று பொருள் கொண்ட மக்களுக்கும், இன்று அலக்-ஒட்டிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று என்று பொருள் கொள்ளும் மக்களுக்கும், மார்க்க அநுஷ்டானங்களில் எந்த மாறுதலையும் செய்து கொள்ள உரிமையில்லை. அதேபோல், 86:6,7 வசனங்களுக்கு காலாகாலமாக" (மனிதன்) குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்படான்: அது முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளியாகிறது" என்றே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று மருத்துவத் துறையிலும், மனித உடற்கூறு துறையிலும் தேர்ந்த விற்பன்னர்கள் இப்படி பொருள் கொள்வது சரியில்லை. வெளிப்படுத்தப்பட்டதொரு திரவத்தில் இருந்தே, (மனிதன்) படைக்கப்பட்டான். ஆண்(குறி)பெண்(குறி) சேர்ந்து இயங்கும்பொழுது வெளியாகிறது அது" என்று பொருள் கொள்வதே மருத்துவ அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்கின்றனர். இதுவரை விளக்கியவை நடைமுறையில் இருந்தவை. ஆனால் மக்கள் அன்றைய கால சூழ்நிலைக்கேற்றவாறு ஒருவிதமாகப் புரிந்து வைத்திருந்தனர்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் அவற்றைவிட நிறைவான விளக்கங்களைப் பெற முடிகின்றது. அதே சமயம் நடைமுறையில் இல்லாமல் மறைபொருளாக இருந்த பல விஞ்ஞான உண்மைகளையும், மனிதனுக்கு தேவையான பல கண்டுபிடிப்புகளையும் வெளியில் கொண்டு வர குர்ஆனின் பல முத்தஷாபிஹாத் வசனங்கள் உதவியுள்ளன. அவற்றை விளக்குவது இங்கு நமது நோக்கமல்ல. அவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் டாக்டர் மாரிஸ் புகைலின் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குர்ஆனும் என்ற நூலையம், அதுபோன்ற இதர நூல்களையும் பார்வையிடவும். அடுத்து இந்த முத்தஷாபிஹாத்வசனங்களில் மறைந்திருக்கும் விஷயங்களை வெளிக்கொணர அரபி இலக்கண, இலக்கியங்களில் பாண்டித்யம் அவசியமா? என்று ஆராய்வோம்.