குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (2)
http://sukrymuhajiree.blogspot.com/2016/04/2_30.html
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (2)
[ அல்குர்ஆன் தெய்வீக வெளிப்பாடாக இருந்ததால், சாதாரண அறிவு படைத்தவர்களும் அதி அற்புதமாக விளங்கிக் கொள்ளும் நிலையிலும், எளிதாகவும் இருக்கும் அதே வேளை மறுபுறம் சாதாரண அறிவு படைத்தவர்கள் பேசும் கொச்சை நடையிலும் அது அமைந்திருக்கவில்லை. இது அல்குர்ஆனின் ஓர் அற்புதமே.]
அடுத்து அரபியில் ஒரே வார்த்தைக்குப் பல பொருள்கள் உண்டு. வசனங்களிலும் பல பொருள் பெற இடமுண்டு. இது பற்றிய தெளிவான ஞானமில்லாதவர்கள் குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறி வருகின்றனர். இதுவும் மக்களை குர்ஆனை விட்டும் திசை திருப்பும் ஒரு முயற்சியே ஆகும்.
இந்த நிலை அரபி மொழிக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் இப்படிப்பட்ட நிலைகளைப் பார்க்கலாம். பொதுவாக மொழிகளுக்குரிய இந்த தடுமாற்றங்களை குர்ஆன் அளவில் கொண்டு சேர்க்கலாமா? குறிப்பாக குர்ஆனின் "ஆயாத்தும் முஹ்க்கமாத்" என்ற குர்ஆன் 3:7ல் குறிப்பிடப்படும் வசனங்கள் பற்றி அவ்வாறு சொல்லலாமா? என்று பார்த்தால் நிச்சயமாக அவ்வாறு சொல்ல முடியாது. இந்த 3:7 வசனத்தின் விளக்கததைப் பின்னால் பார்ப்போம்.
இங்கு ஒன்றை, நன்றாக நாம் ஞாபகத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். உலகில் காணப்படும் ஏனைய நூல்களைப் போல் அல்குர்ஆன் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நூல் அல்ல. அன்றைய பெரும் பெரும் புலவர்கள், அரபி இலக்கண, இலக்கிய விற்பன்னர்கள் எல்லோரும் ஏகோபித்து ஒன்றைச் சொன்னார்கள். அதாவது "மாஹாதா கவ்லுல் பஷர்" நிச்சயமாக இது மனிதனின் சொல் அல்ல" என்பதாகும்.
ஆக அல்குர்ஆன் தெய்வீக வெளிப்பாடாக இருந்ததால், சாதாரண அறிவு படைத்தவர்களும் அதி அற்புதமாக விளங்கிக் கொள்ளும் நிலையிலும், எளிதாகவும் இருக்கும் அதே வேளை மறுபுறம் சாதாரண அறிவு படைத்தவர்கள் பேசும் கொச்சை நடையிலும் அது அமைந்திருக்கவில்லை. இதிலும், அல்குர்ஆனின் ஓர் அற்புதமே. நாங்கள் கற்றவர்கள், அறிஞர்கள் என்ற மமதையோடு குர்ஆனை அணுகுவோருக்கு அது விளங்காத புதிராகவும், அதேசமயம் நான் அல்லாஹ்வின் அடிமை. நான் என்ற பெருமை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம், என்ற உண்மையான உள்ள உணர்வோடு குர்ஆனை அணுகுவோருக்கு அது எளிதாக விளங்கும் நிலையிலும் அமைந்திருப்பதும் ஓர் அற்புதமே! இதைத்தான் அல்லாஹ் "குர்ஆனை உபதேசிக்க எளிதாக ஆக்கி இருக்கிறோம். எனவே உபதேசம் பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17,22,32,40)
என்று கேட்கிறான். குர்ஆனை விளங்கிக் கொள்வதாக இருந்தால், ஒருவருக்குக் கண்டிப்பாகத் தேவை "தக்வா" -பயபக்தி-இறையச்சம், இதையே அல்குர்ஆனின் 2:2 வசனமும், இன்னும் பல வசனங்களும் வலியறுத்துகின்றன. இறையச்சம் இல்லாதவர்கள் என்னதான் படித்தவர்களாகவும், பண்டிதர்களாகவும் இருந்தாலும், குர்ஆனை விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
எளிதிலும் எளிதாக்கப்பட்டது
இன்னும் கேளுங்கள்,இவ்வளவு அழகான முறையில் சாதாரணமான அறிவு படைத்தவர்களும் விளங்கிக் கொள்ளும் முறையில் குர்ஆனை எளிதாக்கியதோடு, அல்லாஹ்(ஜல்) விட்டுவிடவில்லை. அவனுடைய அளவற்ற கருணையைப் பாருங்கள். தனது தூதரின் செயல்பாடுகளின் மூலம் அதை இன்னும் தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாமலும் நிலைநாட்டிவிட்டான்.
தெளிவான அத்தாட்சிகளையும், நெறிநூல்களையும் (அத்தூதர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். நபியே!) அவ்வாறே இந்த வேதத்தையும் உம்பால் அருளினோம். மனிதர்களுக்காக (உம்பால்) அருளப்பட்ட இ(ந்நெறிநூ)லை அவர்கள் சிந்திக்கும் பொருட்டுத் தெளிவாக அவர்களுக்கு நீர் விளக்குவீராக! (அல்குர்ஆன் 16:44)
23 வருடங்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் குர்ஆனை செயல்வடிவில் கொண்டு வந்துவிட்டார்கள். குர்ஆன் 3:7ல் "ஆயாத்தும் முஹ்க்கமாத்" என்று சொல்லப்படக்கூடிய ஒவ்வொரு வசனத்தின், சொல்லின் பொருள் இன்னதுதான் என்பதைத் தெள்ளத் தெளிவாகச் செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள். அவற்றில் சந்தேகத்திற்கே இடமில்லாமல் ஆகிவிட்டது.
இதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அல்லாஹ் என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும், எளிதாக்குபவனாகவும் அனுப்பி இருக்கிறான்". அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்) என்றும்
"வெள்ளைவெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும், பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழிதவறவே மாட்டார்கள்". (அறிவிப்பவர்: இர்பான் இப்னு ஸாரியா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜ்ஜா) என்றும் தெளிவாக அறிவித்துச் சென்றார்கள்.
இவ்வளவுக்குப் பிறகு குர்ஆனின் அடிப்படையான "ஆயாத்தும் முஹ்க்கமாத்" வசனங்களுக்கு, அல்லாஹ்வும், அவனது ரஸுலும் கொடுத்த விளக்கங்கள் போதாது, மனிதர்கள் விளக்கம் கொடுத்தே விளங்க முடியும் என்று எண்ணினால், அது உண்மை மார்க்கத்தை விட்டு வழிகெட்டுச் செல்ல ஷைத்தான் செய்யும் ஒரு மாபெரும் சூழ்ச்சி என்பதை அறிவுடையவர்கள் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும்.
மார்க்க விவகாரங்களில் குர்ஆன் என்ன கூறுகிறது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு என்ன விளக்கம் கூறி இருக்கிறார்கள் என்று பார்த்து விளங்கி நடப்பதே நமது கடமை. முன் சென்ற அறிஞர்கள், பெரியார்கள் சொல்லியுள்ளதாகச் சொல்லப்படும் கருத்து குர்ஆன், ஹதீதுக்கு முரண்பட்டால், உடனடியாக நாம் அந்தக் கருத்தை விட்டு விட்டு, குர்ஆன் ஹதீதை எடுத்து நடப்பதை விட்டு, அந்தப் பெரியார் தப்பாகவா சொல்லி இருப்பார்? அவருக்கு குர்ஆன் ஹதீதுகள் தெரியாதா? என்ற ஐயங்களைக் கிளப்ப, ஆராய நாம் போக வேண்டியதில்லை. காரணம் குர்ஆனில் அல்லாஹ் இதைத்தான் தெளிவாகத் தடுத்துள்ளான்.
முன்னோர்களைப் பின்பற்றுவது வழிகேடு:
"அந்த உம்மத் (சமூகம்) சென்று விட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்". (அல்குர்ஆன் 2:134,141)
இவ்வளவு தெளிவாக அல்லாஹ் கட்டளையிட்டபின் முன்னோர்களைப் பற்றிப் பேசுபவர்கள் நேர் வழியில் இருக்க முடியுமா?
"எவர் திருமறைக்குத் தம் நோக்கப்படி விளக்கம் கூறுகின்றாரோ! அவர் சரியாகக் கூறியிருந்த போதிலும், நிச்சயமாக அவர் குற்றவாளியே ஆவார்: தவறிழைத்தால் நிராகரிப்பவர் ஆகின்றார்" என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்காகும். அறிவிப்பவர்: ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூது, திர்மிதி, இந்த ஹதீஸ் பலஹீனமானதாகும்.
இப்போது, சமுதாயத்தில் நடைமுறையில் என்ன நடைபெற்று வருகின்றது. மேலே கூறப்பட்ட பலவீனமான ஹதீதைச் சொல்லிக்காட்டி, இப்போதுள்ளவர்கள் குர்ஆனை சுயமாக விளங்க முடியாது. முன்சென்ற பெரியார்கள், இமாம்கள் எழுதி வைத்துள்ள கருத்துக்களையே எடுத்துச் செயல்பட வேண்டும் என்று திசை திருப்பப்படுகின்றனர். ஆனால் உண்மை என்ன?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீதைச் சரியானது என்று வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் இன்றுள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாத எல்லா முஸ்லிம்களுக்கும் அதுதான் சட்டம். முன்னோர்களுக்கும் அதுதான் சட்டம். முன்னோர்களும் தங்கள் இஷ்டத்திற்கு குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்திருக்க முடியாது என்ற மறுக்க முடியாத உண்மையை அறியத் தவறி விடுகின்றனர்.
மார்க்க விவகாரங்களில் வஹியின் தொடர்புடன் இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விளக்கத்தையே நாம் பார்க்க வேண்டும். இந்த அடிப்படைக் கொள்கையை நாம் காற்றில் பறக்க விட்டு விட்டதால், இன்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் மனித அபிப்பிராயங்கள் அடங்கிய தப்ஸீர்களையும் மற்றும் கிரந்தங்களையும், குர்ஆன் ஹதீதுகளோடு சரிபார்க்காமல், கண்மூடித்தனமாக அப்படியே நெறிநூல் புத்தகங்களாக ஏற்று, உண்மை மார்க்கத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டோம்.
குர்ஆனும், ஹதீதுகளும் தெளிவாகக் கூறும் காரியங்களிலும், அவற்றிற்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். முன்னோர்கள் மீது நமக்கிருக்கும் முரட்டுப் பக்தியானது, குர்ஆன் வசனங்களையும், உண்மை ஹதீதுகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டேமுன்னோர்கள் என்ன தப்பாகவா நடந்திருப்பார்கள்? என்று சொல்லிக் கொண்டே தவறான போக்கிலேயே போய்க் கொண்டிருக்கின்றோம். சமுதாயத்தின் இந்த இழிந்த நிலை மாற வேண்டும்.
குர்ஆனில் நம் இஷ்டப்படி கருத்துக்களை தேடிப் பிடிப்பவர்கள் வழி தவறியவர்கள் என்பதை குர்ஆன் அழகாகத் தெளிவு படுத்துகின்றது.
அவன்தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (ஒரே பொருள்) வசனங்கள் இருக்கின்றன. இவைதான் இந்நெறிநூலின் அடிப்படையாகும். மேலும்,எஞ்சியவை பல பொருள் பெறத்தக்கவை(தீர்க்க மற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள், குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி, அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால், இவற்றின் உண்மைக் கருத்துக்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார்.
அறிவில் தேர்ந்தவர்களோ "நாங்கள் இவற்றில் (பூரணமாக) நம்பிக்கை கொண்டோம். இவை அனைத்துமே எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தவை தாம்" என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் 3:7)
இந்த வசனத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த விளக்கம் வருமாறு:
நபி(ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை "உலுல் அல்பாப்" முடிய ஓதினார்கள். பின்னர் "பல பொருளுடைய வசனங்களில் குதர்க்கம் புரிபவர்களை நீங்கள் காணின் இவர்களைப் பற்றித்தான் இறைவன் இந்த வசனத்தில் கூறியிருக்கிறான் என்று அறிந்து, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள்"" என்று தனது உம்மத்தை (சமூகத்தை) எச்சரித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்:" புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ)
நபி(ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை "உலுல் அல்பாப்" முடிய ஓதினார்கள். பின்னர் "பல பொருளுடைய வசனங்களில் குதர்க்கம் புரிபவர்களை நீங்கள் காணின் இவர்களைப் பற்றித்தான் இறைவன் இந்த வசனத்தில் கூறியிருக்கிறான் என்று அறிந்து, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள்"" என்று தனது உம்மத்தை (சமூகத்தை) எச்சரித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்:" புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ)
மேலும் ஆராய்வோம்.
இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் தெளிவாக ஆராய்ந்து அறிவதற்கு முயற்சிப்போம். காரணம் இந்த வசனத்தின் தெளிவான விளக்கத்தை நாம் அடைந்து கொள்வது, அல்குர்ஆனின் இதர அனைத்து வசனங்களையும் பிரித்தறிந்து கொள்வதற்கும், "முஹ்க்கமாத்" வசனங்களையும் தெளிவாகப் புரிந்து செயல்படுத்துவதற்கும், அது நமக்கு பெரிதும் உதவும்.
இந்த 3:7 திருவசனத்திலிருந்து, இரண்டு வகையான வசனங்கள் நெறிநூலில் இடம் பெற்றுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி நமக்குத் தெளிவாக விளங்குகின்றது. அதிலும் "முஹ்க்கமாத்" வசனங்களே அல்குர்ஆனின் அடிப்படை நோக்கமாகும் என்பதும் தெளிவாகப் புரிகின்றது. "முதஷாபிஹாத்"" வசனங்கள் மார்க்க அடிப்படையில் செயல்பாட்டுக்குரிய வசனங்கள் அல்ல என்பதும் தெளிவாகப் புரிகின்றது. ஒன்றைச் செயல்படுத்துவதாக இருந்தால், அதைப் புரிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. "முதஷாபிஹாத்" வசனங்களின் உண்மையான (தீர்க்கமான) கருத்துகளை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார் என்று அல்லாஹ்வே தெளிவாக அறிவித்திருப்பதால், அறியாத ஒன்றை செயல்படுத்தும்படி அல்லாஹ் நம்மை நிர்ப்பந்திக்க மாட்டான் என்பது தெளிவான விஷயம்.
"வமாஜஅல அலைக்கும் ஃபித்தீனி மின் ஹரஜின்"-இம் மார்க்கத்தில் நாம் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் எற்படுத்தவில்லை" என்று அல்லாஹ் 22:78 அல்குர்ஆன் வசனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான். இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இன்னமாபுஹிஸ்தும் முயஸ்ஸரீன்"... "நீங்கள் எளிதாக்கப்பட்டவர்களாகவே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறீர்கள்" (புகாரீ) என்று இதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள். ஆக ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத்தரும் "முதஷாபிஹாத்" வசனங்களின் உண்மைக் கருத்துகளை அல்லாஹ்வே அறிவான் என்பதிலிருந்து, அவை மார்க்க விஷயங்களில் மனிதர்களால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அல்ல என்று விளங்கிக் கொள்கிறோம்.
இதிலிருந்து மார்க்க விஷயங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய "முஹ்க்கமாத்" வசனங்கள் ஒரே கருத்தைச் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவும், பகிரங்கமாகவும் அறிவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. இதை அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் "ஆயாத்தும்முபீன்" தெளிவான வசனங்கள், எனக் குறிப்பிட்டு பலமுறை ஊர்ஜிதம் செய்கிறான். ஆக நம்மால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய "முஹ்க்கமாத்" வசனங்களில் இப்படியும் பொருள் எடுக்கலாம். அப்படியும் பொருள் கொள்ளலாம் என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்கள் உள்ளத்தில் மாறுபாடு இருக்கிறது. மக்களை வழிகெடுக்க அவர்கள் முற்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது நமது அபிப்பிராயம் அல்ல. அதே குர்ஆன் வசனமும், அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த விளக்கமும் தெளிவாக எச்சரிக்கின்றன.
மார்க்க விஷயங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமற்ற "முதஷாபிஹாத்" வசனங்களை அல்லாஹ் ஏன் இறக்கி இருக்க வேண்டும்? என்ற பெரிய சந்தேகம் நமக்கு எழக் கூடும். இன்ஷா அல்லாஹ் அதன் தெளிவை பின்னால் நாம் விரிவாக ஆராய்வோம். இப்போது, நாம் அவசியமாக விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம் மார்க்க விஷயங்களில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய"முஹ்க்கமாத்" வசனங்கள் தெள்ளத் தெளிவானவை. அவற்றிற்கு மனிதர்கள் யாரும் எவ்வித விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நபிமார்களையே அல்லாஹ் தனது கண்காணிப்பில் வைத்து தன்னால் அறிவிக்கப்பட்டதைக் கூட குறைய எதுவும் செய்யாமல் அப்படியே மக்களுக்கு அறிவிக்கும்படி கட்டளையிடுகிறான். அது விஷயத்தில் அவர்கள் குறைவு செய்தால் மிகக் கடுமையாகத் தண்டிப்பதாகவும் எச்சரிக்கிறான். நபிமார்களும் தங்கள் சுய அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ மார்க்கக் கட்டளைகளில் நுழைக்க அல்லாஹ் ஒரு சிறிதும் அனுமதிக்கவில்லை. மார்க்கச் செயல் பாட்டுக்குரிய அறிவிப்புகள் அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மக்களைப் போய்ச் சேர வேண்டும், என்ற விஷயத்தை, அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.இவையனைத்தும் நமது அபிப்பிராயங்களோ யூகங்களோ அல்ல. இவையனைத்தையும் தெளிவு படுத்தும் குர்ஆன் வசனங்களே தெள்ளத் தெளிவாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மார்க்க விஷயங்கள் அல்லாஹ்வின் அறிவிப்புப்படியே இருக்க வேண்டும் என்பதற்குரிய ஆதாரங்கள்:
ஆதம் அலைஹிஸ்ஸலாம் சுவர்க்கலோகத்தில் வாழ்ந்து அனுபவ வாயிலாக (தன்னுடைய சந்ததிகளைவிட) சுவர்க்கத்தையும், மலக்குகளையும், ஷைத்தானையும் நேரடியாகவும் தெளிவாகவும் அறிந்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஆதம் அலைஹிஸ்ஸலாம் இவ்வுலகிற்கு வந்தபின், தான் பெற்றுள்ள அனுபவங்களை வைத்து சுய அபிப்பிராயப்படியும், யூகங்கள் படியும் மார்க்க காரியங்களைச் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளையைக் கீழ்காணும் வசனம் தெளிவுபடுத்துகிறது.
நாம் சொன்னோம், "நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்; யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:38)
அல்குர்ஆன் 20:123 வசனமும் இதையே ஊர்ஜிதப்படுத்துகிறது.
கப்ரு வணங்கிகள் அடிக்கடி ஓதி மக்களை ஏமாற்றும் ஒரு சொற்றொடர் ""லா கவ்ஃபுன் அலைஹிம் வலாஹும் யஹ்சனூன்""- அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். இந்த 2:38 வசனத்தில் முதன் முதலில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி நடப்பவர்களுக்குப் பயமோ, துக்கமோ இல்லை. அவுலியாக்கள் அப்படி நடந்து வந்ததால் அவர்களுக்குப் பயமோ, துக்கமோ இல்லை. இந்த சொற்றொடரைக் காட்டி "அவுலியாக்களிடம் போய்க் கேட்கலாம். அவர்கள் கொடுப்பார்கள். அல்லது அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள்" என்று மக்களை வழிகெடுப்பவர்கள் 3:7 வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி தங்கள் உள்ளங்களில் மாறுபாடு உடையவர்களேயாவார்.
இந்த 2:38, 20:123 வசனங்களிலிருந்து மார்க்கம் என்றால் அது அல்லாஹ்வின் அறிவிப்பின்படியே இருக்க வேண்டும். மறுமை விஷயத்தில் ஓரளவு அனுபவமுள்ள ஆதம்(அலை) அவர்களையே சுயமாக நடந்துகொள்ள அல்லாஹ் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் மறுமையைப் பற்றி அறவே அனுபவமில்லாத மற்ற மனிர்கள் தங்கள் சுய அபிப்பிராயப்படியும், யூகங்களின் படியும் நிச்சயமாக நடக்க முடியாது என்பது நமக்குத் தெளிவாகப் புரிகின்றது. அப்படி நடப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பதையும் அடுத்த வசனம் உறுதிப்படுத்துகின்றது.
"அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ, அவர்கள் நரக நெருப்பின் தோழர்களாவர், அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பவர். (2:39). 20:124-127ம் எண்ணுள்ள வசனங்களும் இதையே ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைத் தொடர்ந்து எல்லா நபிமார்களுக்கும் வஹிமூலம், தனது நேர்வழியை அல்லாஹ் தெளிவுபடுத்தினான்.
''ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்)தூதர்கள் வந்து, என் வசனங்களை விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ, அவர்களுக்கு அச்சமில்லை. அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்'. (7:35)
இந்த வசனத்திலும் கபுரு வணங்கிகள் மக்களை அவுலியாக்களின் பேரால் ஏமாற்றப் பயன்படுத்தும் "லாகவ்ஃபுன்" .. என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளதை ஊன்றிக கவனிக்கவும்.
''அல்லாஹ்வின் ஆணைப்படி ஒழுகுவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் யாதொரு தூதரையும் அனுப்பி வைக்கவில்லை". (4:64)
''நுஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கிறான். ஆகவே, (நபியே) நாம் உமக்கு வஹி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள்" என்பதேயாகும். (42:13)
மார்க்கத்தில் பிரிவுகள் இல்லை; இஸ்லாத்தில் பிரிவுகளைக் கற்பிக்கக் கூடாது என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகின்றது. மார்க்கக் காரியங்களில் கூடுதல் குறைவு செய்யக் கூடாது.
வஹியாகப் பெறுவதை அப்படியே மக்களுக்கு அறிவித்து விட வேண்டும் என்று இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகக் கடுமையாக எச்சரித்து இறக்கப் பட்ட பல குர்ஆன் வசனங்களைப் பார்க்கிறோம்.
''நேரான மார்க்கத்தில்தான் நபியே உம்மை ஆக்கி இருக்கிறோம். அதனைப் பின்பற்றி நடப்பீராக. அறிவற்றவர்களின் வழியைப் பின்பற்றாதீர்.'' (45:18)
''(நபியே!) நீர் இப்றாஹீமுடைய நேரான மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு நாம் வஹி அறிவித்தோம்.'' (16:123)
''வஹிமூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளும். நிச்சயமாக நீர் நேரான பாதையில்தான் இருக்கின்றீர்.'' (43:43)
''நிச்சயமாக இது உமக்கும், உமது சமூகத்திற்கும் நல்லுபதேசமாகும்''. (43:44)
''(நபியே!) உமது முகத்தை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் திருப்பிவிடுவீராக.'' (30:30)
''(நபியே!) உமது இறைவனால் உமக்கு வஹிமூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றும். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கிறான்.'' (33:2)
''அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின் எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்.'' (28:87)
''அல்லாஹ்வின் வழி காட்டலே மெய்யான வழிகாட்டல்.'' (3:73)
''அல்லாஹ்வின் மார்க்கம் விட்டு, வேறு மார்க்கம் விரும்புகிறீர்களோ?'' (3:83)
''நேர்வழி செல்லுங்கள், வேறு வழி தேட வேண்டாம்.'' (6:153)
(நபியே) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதனை நீர் தெளிவாக்குவதற்காகவே இந்நெறிநூலை உம்மீது நாம் இறக்கி வைத்தோம்; அன்றி, விசுவாசமுடைய மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. (16:64)
''அல்லாஹ்வின் வழிதான் நிச்சயமாக நேரான வழி என்று கூறிவிடும்.'' (2:120)
இவ்வளவு தெள்ளத் தெளிவான இத்தனை வசனங்களைப் பார்த்த பின்பும், வஹி வந்து கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுய அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ மார்க்கமாக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னுள்ள மனிதர்களின் சுயவிளக்கங்களை ஏற்று நடக்க வேண்டும் என்று சொல்பவர்கள் யாராக இருக்க முடியும்? என்பதை நாம் சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். 3:7ம் வசனம் குறிப்பிடும், உள்ளத்தில் மாறுபாடு உடையவர்களாகத்தான் அவர்கள் இருக்க முடியும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்தார்கள்; அவர்களின் சொந்த விருப்பங்களும் நிராகரிக்கப்பட்டன என்பதற்குரிய ஆதாரங்கள்:
''(நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்''. (52:48)
உஹத் யுத்தத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளால் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். முகத்தில் படுகாயம் ஏற்பட்டு, வேதனை தாங்க முடியாத நிலை. அப்போது அவர்கள், "தங்களுடைய நபிக்கு இந்த அளவு சிரமத்தைக் கொடுத்த இந்த சமூகம், எவ்வாறு சித்தியடையும்?" என்று கேட்டுவிட்டார்கள். இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ்(ஜல்) இதைக் கண்டித்து, உடனே வஹி இறக்கினான்.
""(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் யாதொரு அதிகாரமும் இல்லை (தீர்ப்பு அவனுடையது). அவன் அவர்களை மன்னித்து விடலாம் அல்லது வேதனைப் படுத்திடலாம். நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கிறார்கள்?.'' (3:128)
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களைத் திருப்திப்படுத்த அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை தமக்கு ஹராமாக்கி இருப்பதாகச் சத்தியம் செய்து விட்டார்கள். இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ் உடனே வஹி மூலம் அறிவித்து, அவர்களின் சத்தியத்தை (பரிகாரமுடன்) முறிக்கச் செய்துவிட்டான்.
''நபியே! உம் மனைவியரின் திருப்திக்காக அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக்கொண்டீர்! மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்". (66:1)
"அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்குக் கடமையாக்கி இருக்கிறான். மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன். ஞானமிக்கவன்". (66:2)
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, தமது விருப்பங்களை மார்க்கமாக்க அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை என்பதை மேலே காட்டிய வசனங்களிலிருந்து நன்கு அறியலாம்.
அடுத்து, மார்க்க விஷயத்தில், அல்லாஹ்வின் அனுமதியன்றி, ஒன்றைச் சொல்ல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அளவு பயந்து இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள்:
வேதக்காரர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, குகைவாசிகளைப் பற்றித் தங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற நம்பிக்கையில் நாளைச் சொல்லுகிறேன் என்று கூறிவிட்டார்கள். எதிர்பார்த்தபடி வஹி மறுநாள் வரவில்லை. நாட்கள் பதினைந்து ஆகியும் வரவல்லை. வேதக்காரர்கள், நாளைக் சொல்வதாகச் சொன்னீர்களே என்று ஒவ்வொரு நாளும் வந்து கேட்டு, தொந்தரவு, ஏளனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நபிகளாரோ பதில் சொல்ல முடியாது தவித்தார்கள். இக்கட்டான இந்த நிலையிலும், நமது அபிப்பிராயத்தையோ யூகத்தையோ சொல்ல முன் வந்தார்களில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழம்பித் தவித்திருந்த 15 நாட்களுக்குப் பிறகு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்தது.
"நபியே! இன்ஷா அல்லாஹ் சொல்லாமல், நாளை சொல்வேன் அல்லது செய்வேன் என்று சொல்லாதீர்" (18:23,24) என்று எச்சரித்துவிட்டு, அவர்களைப் பற்றிய விபரங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான். (தஃப்ஸீர் இப்னுகஸீர்) பின்னர், அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை, வேதக்காரர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பெரும் இக்கட்டான நிலையிலும்கூட, நபிகளார், தம் சொந்த அபிப்பிராயத்தை யூகத்தைக் கூற முன் வந்தார்களில்லை. இதிலிருந்து அறிவுடையோர் படிப்பினை பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
"ஃபஸ்அலூ அஹ்லதிக்ரி இன்குன்த்தும் லாதஃலமூன்"
.. நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் "திக்ரை" உடையவர்களிடம் கேளுங்கள்" என்ற அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒருவர் நம்மிடம் மார்க்கம் பற்றிய ஒரு விஷயத்தைக் கேட்டால், அதுகுர்ஆனில் இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கூற வேண்டும். அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீதை ஆதாரத்துடன் எடுத்துக் கொடுக்க வேண்டும். இதை விடுத்து, முன்னோர்களின் அபிப்பிராயங்களையும், யூகங்களையும் எடுத்துச் சொல்வது பெருந்தவறாகும். அதேபோல் இவர்கள் சொந்த அபிப்பிராயங்களை, யூகங்களை சொல்லுவதும் குற்றமாகும். அதனால்தான் "திக்ரை" உடையவர்களிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானே அல்லாமல் "அஹ்லல் இல்மி" – அறிவுடையவர்களிடம் கேளுங்கள் என்று சொல்லவில்லை. இதற்கும் குர்ஆன் வசனமே தெளிவான ஆதாரமாக இருக்கிறது.
''(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹி கொடுத்து, நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர, வேறல்லர். ஆகவே, நீங்கள் அறிந்து ககாள்ளாமல் இருந்தால், நெறிநூல் ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் (என்று கூறுவீராக)" (16:43, 21:7)
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள், முன்னரே உலகில் நடந்து முடிந்துவிட்டவையாகும். தெரியாவிட்டால், இவற்றைத் தெரிந்து வைத்திருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது மட்டுமே. இந்த இடத்தில் கேட்கப்படுபவர் நெறிநூலின் மூலம் தெரிந்து வைத்திருப்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறாரே தவிர, தனது சொந்த அபிப்பிராயங்களையோ, யூகங்களையோ அவர் ஒருபோதும் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வது பெருங்குற்றமாகும். இது விஷயத்தில் மனிதர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே, அல்லாஹ் எந்த அளவு கண்டிக்கிறான் என்பதை, கீழ்வரும் இறை வசனங்கள் இன்னும் தெளிவாக நிரூபிக்கின்றன.
"அன்றியும், நம்மீது, சொற்களால் சிலவற்றை இட்டுக்கட்டிக் கூறியிருப்பாரானால் அவரை நம் வலக்கரப் பிடியாகப் பிடித்து, அவருடைய நாடி நரம்பை நாம் தரித்து விடுவோம்; அன்றியும் உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை". (69:44, 45,46,47)
"நிச்சயமாக நாம் உமக்கு வஹி மூலம் அறிவித்ததை (விட்டு விட்டு), அதல்லாததை, நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி, உம்மை அவர்கள் திருப்பி விடவே இருந்தார்கள். அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மை அவர்கள் (தங்கள்) உற்ற நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உம்மை நாம் ஸ்திரப்படுத்தி வைக்காவிடில், நீர் ஒரு சிறிதேனும், அவர்களின் பால் சாய்ந்து விடக்கூடுமாயிருந்தது. அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால், நீர் ஜீவித்திருக்கும்பொழுதும், நீர் மரித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சகிக்கும்படி செய்திருப்போம். அதன் பின்னர் நமக்கெதிராக, உமக்கு உதவி செய்வோர் ஒருவரையும் நீர் காணமாட்டீர்".(17:73-75)
மக்கள் எதிர்க்கிறார்கள்-மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் அவர்கள் தயவு நமக்கில்லாமற் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக, குர்ஆனில் உள்ளதை, உண்மை ஹதீதுகளிலுள்ளவற்றை, சத்தியம் என்று நன்கு அறிந்துகொண்டதைப் பகிரங்கமாகச் சொல்லத் தயங்கும் அறிஞர்கள், மேற்கண்ட வசனங்களை நன்கு சிந்தித்துப் படிப்பினை பெறுவார்களாக.
"உமக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிடுவீரோ?" (11:12)
"தூதரே! உம் இறைவனிடமிருந்து, உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும். அவ்வாறு நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். அல்லாஹ் மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்". (5:67)
அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள எந்த ஆதாரமும் இல்லாமல் இறை வசனங்களைப் பற்றி விவாதம் செய்வது பெருங்குற்றம், அதில் சம்பந்தப்படாதீர் என்று இறைத் தூதரையே அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கிறான்.
"(நபியே!) நம் வசனங்கள் பற்றி வீண் விவாதங்களில் ஆழ்ந்திருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில், நீர் அவர்களைப் புறக்கணித்துவிடும். (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்த பின்னர் அவ்வக்ரமக்கார மக்களுடன் உட்கார்ந்திருக்க வேண்டாம்" (6:68)
அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரை அக்ரமக்காரர்கள் என்றே அல்லாஹ் வர்ணிக்கிறான். அப்படித் தர்க்கம் செய்வதாய் இருந்தால், அதற்கும் இறைவனிடமிருந்தே ஆதாரம் இருக்க வேண்டும்.
"(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதொரு ஆதாமுமின்றி, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிப்பது, அல்லாஹ்விடத்திலும், விசுவாசிகளிடத்திலும் மிக்க அருவருப்பானது. இவ்வாறே பெருமையும் கர்வமும் கொண்ட ஒவ்வோர் இதயத்திலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். (40:35)
அல்லாஹ் சொல்லியுள்ளதற்கு மேல் விளக்கம் தேட முயல்வது, யூகம் செய்வது, அறியாமையும், குற்றமுமாகும் என்பதை 18:22 வசனமும் தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ்வின் வசனங்களை அப்படியே ஏற்றுச் செயல்படவேண்டும். பேசுவதாக இருந்தால் வேறு இறை வசனமோ உண்மை ஹதீதோ ஆதாரமாக வைத்துப் பேச வேண்டும். இவர்கள் சொந்தக் கருத்துப்படி இப்படிப் பொருள் செய்யலாம். அப்படிப் பொருள் செய்யலாம் என்று தர்க்கிக்க முற்பட்டால், அவர்கள் பெருமையும் கர்வமும் கொண்டவர்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். மேலும் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விடுவதாகவும் எச்சரிக்கிறான். அப்படியானால் அவன் வழி கேட்டிலிருந்து நேர்வழிக்கு வரவே முடியாது. இது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் என்பதைச் சிந்திக்கவும்.
''உங்களுக்குச் சிறிது ஞானமிருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள். (அப்படியிருக்க) உங்களுக்கு சிறிது கூட ஞானமில்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.'' (3:66)
இந்த இறைவசனம் பட்டவர்த்தனமாக மனிதனின் நிலையை வர்ணிக்கிறது. மறுமையில் இதைக் கொண்டு நன்மை கிடைக்கும். இதைக் கொண்டு தீமை ஏற்படும் என்று மனிதன் எப்படி அறிவான்? எனவே இது விஷயத்தில் அவனது அபிப்பிராயங்களையும், யூகங்களையும் நுழைக்க முற்படுவது பெருங்குற்றமாகும். மரணத்திற்குப் பின் நன்மை கிடைக்கும் அல்லது தீமை கிடைக்கும் என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கு அறிவான். எனவே மார்க்கக் காரியங்களில், அல்லாஹ்வின் அறிவிப்பின்றி, மனிதர்களின் அபிப்பிராயங்களும், யூகங்களும் செல்லவே செல்லாது. இதை இன்னும் தெளிவாக ஊர்ஜிதப் படுத்துகின்றது.
இன்னொரு இறைவசனம்:
அல்லாஹ்வும் அவனது தூதரும், யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில்(அதற்கு மாறாக வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள், பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்". (33:36)
இவ்வளவு ஆதாரங்களுக்குப் பிறகும், இது விஷயத்தில் விவாதம் செய்வோர் இந்த இறை வசனத்தைக் கவனிக்கவும்.
''நாம் அருளியவற்றை மனிதர்களுக்காக, நெறிநூலில் தெளிவுபடுத்திய பின்னும், எவர்கள் மறைக்கின்றார்களோ, அவர்களை, நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றான். சபிப்போரும் சபிக்கின்றனர்." (2:159)
இப்படிப்பட்டவர்கள் இறை வசனங்களை மறைப்பவர்களாகவும், புரட்டுகிறவர்களாகவும் மட்டுமே இருக்க முடியும். நன்கு அறிந்து கொண்டே, இவ்வாறு செய்கின்றனர்.
''நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள், எவரும் தங்கள்் குழந்தைகளை அறிவதுபோல், (உண்மையை)அறிவார்கள்.'' (6:20)
அவர்கள் அறிந்து கொண்டே, சத்தியத்தை மறைக்கவும், புரட்டவும் முற்படுகின்றனர்.
''அல்லாஹ் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விட அநியாயக்காரர்கள் யார்? அத்தகையோர் மறுமையில், தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது, பொய் கூறியவர்கள்" என்று சாட்சி கூறும் மலக்குகள் சொல்வார்கள். இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். அவர்கள் மனிதர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும் கோணலையும் உண்டு பண்ண விரும்புகிறார்கள். இவர்கள் தாம், மறுமையை நிராகரிப்பவர்கள்.'' (11:18,19)
உண்மையில் நபிகளாரைப் பின்பற்றி நடப்பவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, அல்லாஹ் இட்டுள்ள கட்டளையை தாங்களும் எடுத்து நடப்பார்கள்.
"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே, நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக, அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர், அன்றி உமக்கு அல்லாஹ் அருளியவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி, எச்சரிக்கையாக இரும், (உம்முடைய) தீர்ப்பை, அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்து கொள்ளும், அவர்களின் சில பாவங்களுக்காக, அல்லாஹ் அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர், பாவிகளாகவே இருக்கின்றனர். (5:49)
இவ்வளவு தெளிவான ஆதாரங்களுக்குப் பிறகும், மார்க்க காரியங்களில், மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும் புகுத்த முற்படுகிறவர்கள், உண்மையில் மார்க்கம் பற்றி அல்லாஹ்வுக்குக் கற்றுத் தர முற்படுகின்றனர்.
''மார்க்கம் பற்றி அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கிறீர்களா?'' (49:16)
இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சிந்திப்பவர்கள் "முஹ்க்கமாத்" வசனங்களில், நபி(ஸல்) அவர்கள் தவிர, வேறு மனிதர்களின் ஆராய்ச்சியோ, தெளிவோ, விளக்கமோ, வழிகாட்டலோ அவசியமே இல்லை. தப்ஃஸீர் என்ற பெயரில் மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும், இஸ்ரவேலர்களின் கற்பனைக் கட்டுக்கதைகளையும் எழுதி வைத்திருப்பவர்களை, எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற அடிப்படையில், தங்கள் உள்ளங்களில் மாறுபட்ட எண்ணத்துடன் தாங்களும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்ட தஃப்ஸீர்களை, வேதப் புத்தகங்களாக மதித்து, நம்பி, எடுத்து நடப்பவர்கள், நிச்சயமாக வெற்றிபெற முடியாது. நாளை மறுமையில் அல்லாஹ்வின் கோபத்திற்கும், பயங்கர நரக வேதனைக்கும் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கிறோம். அடுத்து இந்த "முஹ்க்கமாத்" வசனங்களை அறிந்துகொள்ள, அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமா? என்று சிறிது பார்த்துவிட்டு,முத்தஷாபிஹாத்" வசனங்களைப் பற்றி ஆராய்வோம்.